» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நச்சுக்காற்றை சுவாசித்த 30 பேருக்கு வாந்தி, மயக்கம் : தொழிற்சாலைக்கு சீல் வைப்பு

திங்கள் 22, ஏப்ரல் 2024 10:44:13 AM (IST)

விழுப்புரம் அருகே தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சுக்காற்றை சுவாசித்த 30 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த தொழிற்சாலையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

விழுப்புரம் அருகே உள்ள வேடம்பட்டு கிராமத்தில் தனியார் மருத்துவக்கழிவு தொழிற்சாலை கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் மருத்துவக்கழிவுகளை சேகரித்து அவற்றை தரம் பிரித்து சுத்திகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால் அதை முறையாக செய்யாமல் கழிவுகளை அப்பகுதியிலேயே எரித்து வருவதால் அதிலிருந்து வெளியேறும் கரும் புகையினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், கரும்புகை காற்றில் கலந்து நச்சுக்காற்றாக மாறுவதால் சுவாச கோளாறு பிரச்சினை ஏற்பட்டு பலவித தோல் நோய்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும் இந்த தொழிற்சாலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். 

இருப்பினும் தொழிற்சாலையை மூடாததால் கடந்த 19-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலையும் புறக்கணித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேடம்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுக்காற்றை சுவாசித்த பலருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதில் முருகன் மனைவி அங்காளவள்ளி (43), சுரேஷ் மனைவி சகுந்தலா (32), தேவராஜ் மனைவி மாரியம்மாள் (47), ஏழுமலை மனைவி சசிகலா (42), ராஜேந்திரன் மகள் வரலட்சுமி (20), செந்தில்நாதன் (44), மதன் (23), சந்திரசேகர் (70), கோலியனூரான் (65), சந்திரன் (57) உள்பட 30 பேருக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் காணை போலீசார் அங்கு விரைந்து சென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 30 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. அந்த தொழிற்சாலையை உடனடியாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த ஆயத்தமாகினர். இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் அந்த தொழிற்சாலைக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

பின்னர் அந்த தொழிற்சாலையை பூட்டி சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அங்குள்ள வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள், பொக்லைன் எந்திரங்கள் ஆகியவற்றை தொழிற்சாலையில் இருந்து போலீசார் வெளியேற்றினர். தொடர்ந்து, தொழிற்சாலையில் இருந்த பொருட்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது.

அதன் பிறகு மக்களின் பாதுகாப்பு கருதி தாசில்தார் வசந்தகிருஷ்ணன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன் ஆகியோர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையிலான போலீசார் முன்னிலையில் அந்த தொழிற்சாலையை பூட்டி சீல் வைத்து மின் இணைப்பை துண்டித்தனர். இதை வரவேற்று வேடம்பட்டு, சாணிமேடு, ஆரியூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory