» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனடாவிலும் காலை உணவுத் திட்டம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

செவ்வாய் 2, ஏப்ரல் 2024 5:42:01 PM (IST)

இந்தியாவில் மட்டுமல்ல, கனடாவிலும் காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது தமிழக முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமாக தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெகுசிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் 7.5.2022 அன்று விதி 110-ன் கீழ், "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை சிற்றுண்டி வழங்கப்படும். நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும், பள்ளிக்குச் செல்லக் கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். 

இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்குக் கிடைத்திருக்கிறது என்றும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம், படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.” என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான 15.9.2022 அன்று முதல்வர், இத்திட்டத்தினை மதுரையில் தொடங்கி வைத்தார்கள். மேலும், 25.8.2023 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த திருக்குவளை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி; காலை உணவுத் திட்டத்தினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தினார்கள். அதன் மூலம் 31,000 அரசுப் பள்ளிகளில் 17 இலட்சம் குழந்தைகள் நாள்தோறும் காலை உணவு உண்டு வகுப்பறைகளில் சிறப்பாகக் கல்வி பயின்று வருகிறார்கள்.

இத்திட்டத்தின் சிறப்புகளை, தெலுங்கானா மாநில அரசு அறிந்து அதன் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்து காலை உணவு தயாரிக்கப்படும் இடம், பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்படுதல், பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடுதல் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துகிறது. தெலுங்கானா மாநிலத்திலும் இந்தக் காலை உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிச் சென்றனர். அவ்வாறே, தெலுங்கானா மாநிலத்தில் தற்போது காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தக் காலை உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் புகழடைந்து வருகின்ற நிலையில், இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் நமது முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கனடா நாட்டில் அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் இன்று (2.4.2024) "கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory