» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காதல் திருமணம் செய்த வாலிபர் ஆணவ படுகொலை : பெண்ணின் அண்ணன் வெறிச்செயல்

திங்கள் 26, பிப்ரவரி 2024 8:49:53 AM (IST)

சென்னையில் காதல் திருமணம் செய்த வாலிபர் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெண்ணின் அண்ணன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன் (26). இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜல்லடியன்பேட்டை கணேஷ் நகர் பகுதியில் வசித்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 

ஆனால் அதையும் மீறி எழும்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பிரவீன்- ஷர்மி பதிவு திருமணம் செய்து கொண்டு பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவில் வசித்து வந்தனர். கூலி வேலை மற்றும் மெக்கானிக் தொழில் செய்து வந்த பிரவீன், நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் பள்ளிக்கரணை பிரதான சாலையில் உள்ள ஓட்டலில் 2 பார்சலில் உணவு வாங்கிக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனியார் மதுபான விடுதிக்கு மது அருந்த சென்றார்.

அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், பிரவீனை மடக்கி அரிவாளால் கொடூரமாக வெட்டி விட்டு தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பிரவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். 

அப்போது பிரவீனை கொலை செய்தது அவரது காதல் மனைவி ஷர்மியின் அண்ணன் தினேஷ் என தெரியவந்தது. இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிரவீன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சாதி ஆணவப்படுகொலை செய்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் தினேஷ் மற்றும் அவரது நண்பர்களை பிடிப்பதற்காக பள்ளிக்கரணை உதவி கமிஷனர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தாம்பரம் அருகே தலைமறைவாக இருந்த ஷர்மியின் அண்ணன் தினேஷ் (23), அவரது நண்பர்களான ஸ்ரீராம் (24), ஜோதிலிங்கம் (25), விஷ்ணு (25), ஸ்டீபன்குமார் (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்த நவம்பர் மாதம் தினேஷின் தங்கை ஷர்மி பெற்றோரின் எதிர்ப்பை மீறி பிரவீனை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் இருந்த தினேஷ், இந்த கொலையை செய்தது தெரியவந்தது. இவர்கள் திருமணம் நடந்தபோது தினேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவில் உள்ள பிரவீனின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டதும், அப்போது பிரவீனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

கொலையான பிரவீன், கடந்த 2022-ம் ஆண்டு பள்ளிக்கரணை பகுதியில் சாம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது பிரவீன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்டீபன் குமார் என்பவர், கொலையான சாமின் நெருங்கிய நண்பர் ஆவார். அப்போது இருந்தே நண்பனின் கொலைக்கு பழிக்குப்பழியாக பிரவீனை கொலை செய்ய வேண்டும் என்று ஸ்டீபன்குமார் சுற்றி வந்தார். 

இதை அறிந்து கொண்ட ஷர்மியின் அண்ணன் தினேஷ், "நம் இருவருக்கும் எதிரி ஒருவர்தான். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் நாம் இருவரும் கூட்டு சேர்ந்து பிரவீனை தீர்த்து கட்டிவிடலாம்” என திட்டம் தீட்டினர். இதற்காக பிரவீனை, தினேஷின் நண்பர் விஷ்ணு செல்போனில் தொடர்பு கொண்டு ஷர்மியின் அண்ணன் பேச விரும்புவதாக கூறி மதுபான பாருக்கு வரும்படி அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரவீன், அவரது நண்பர்களான மாசிலாமணி, சூர்யா ஆகியோருடன் ஓட்டலுக்கு சென்று உணவு பார்சல் வாங்கிவிட்டு பின்னர் மதுபான பாருக்கு சென்றார்.

அப்போது தங்கையின் காதல் திருமணத்துக்கு சாதி ஆணவத்தின் பெயரால் கொலைவெறியில் இருந்த தினேசும், 2022-ம் ஆண்டு சாம் என்பவரின் கொலைக்கு பழிவாங்க காத்திருந்த ஸ்டீபன் ஆகியோரும் சேர்ந்து பிரவீனை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். முன்னதாக பிரவீன் உடன் சென்ற அவரது நண்பர்களான சூர்யா மற்றும் மாசிலாமணி ஆகியோரை தப்பித்து சென்று விடுங்கள் என்று கூறி அங்கிருந்து விரட்டி அடித்துவிட்டு பிரவீனை அவர்கள் கொடூரமாக வெட்டிக் கொன்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் என்ற பிரிவும் பதிவு செய்து கைதான 5 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் சாதி ஆணவத்தின் பெயரால் தங்கையின் கணவனை அண்ணனே நண்பர்களோடு சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory