» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குழாயடி சண்டையில் பெண் பலி: தாயுடன் கல்லூரி மாணவி கைது!

வெள்ளி 23, பிப்ரவரி 2024 11:25:27 AM (IST)

பழைய வண்ணாரப்பேட்டையில் குழாயடி சண்டையில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தாய், மகளை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் வசித்து வருபவர் வெங்கடேசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள் (37). இவர்களுக்கு 3 மகள்கள். அதே தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சாந்தி (38). இவர்களது மகள் வள்ளி (20). இவர், தண்டையார்பேட்டை அரசு கலை கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

முனியம்மாள் வீட்டின் அருகே உள்ள தெருக்குழாயில் நேற்று முன்தினம் மாலை சாந்தி மற்றும் அவரது மகள் வள்ளி இருவரும் பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் பிடித்து முனியம்மாள் வீட்டு வாசலில் வைத்தனர். அந்த தண்ணீர் குடத்தை எடுக்கும்படி முனியம்மாள் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. 

அப்போது சாந்தியும், வள்ளியும் சேர்ந்து முனியம்மாளை கைகளாலும், உருட்டுக்கட்டையாலும் தாக்கி கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இருதரப்பினரையும் அக்கம் பக்கத்தினர் சமாதானம் செய்து வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த முனியம்மாள், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மேலும் இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசில் கல்லூரி மாணவி மற்றும் அவரது தாயார் மீது புகார் செய்தார். 

புகாரை பெற்றுக் கொண்ட வண்ணாரப்பேட்டை போலீசார் முனியம்மாளை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் திடீரென முனியம்மாளுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முனியம்மாள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை போலீசார், முனியம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் நெஞ்சு வலியால் முனியம்மாள் இறந்ததாக தெரிய வந்தது.

எனினும் சாந்தி மற்றும் அவரது மகள் வள்ளி ஆகியோர் உருட்டுக்கட்டையால் தாக்கியதால் முனியம்மாள் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவித்தல் சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து சாந்தி மற்றும் அவரது மகள் வள்ளியை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory