» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி : தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சனி 9, டிசம்பர் 2023 5:26:57 PM (IST)
தமிழகத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழக பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி,தேனி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 16 மாவட்டங்களில் இன்று(டிச.,09) கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு தென் தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.