» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

செவ்வாய் 28, நவம்பர் 2023 5:32:32 PM (IST)

சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்பதால் மத்திய அரசை எதிர் பார்க்காமல் மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமூகரீதியாக பின் தங்கிய நிலையில் உள்ள மக்களை முன்னேற்றுவதற்கான சமூகநீதி நடவடிக்கையின் முதல் படி தான் இட ஒதுக்கீடு. அவ்வாறு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் அளவு அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது. மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார விவரங்களை திரட்டி அவர்களுக்கு ஏற்ற வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்துவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் முழு நோக்கமாக பார்க்கப்படுகிறது.

நாட்டிலேயே முதல்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் பீகார் மாநில அரசு, அம்மாநிலத்தில் ஏற்கனவே அமலில் இருக்கும் 50 சதவிகித இட ஒதுக்கீட்டை 65 சதவிகிதமாக உயர்த்தி அதற்கான சட்டத்தையும் இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவிகிதத்திலிருந்து 43 சதவிகிதமாகவும், பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு 13 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாகவும் உயர்ந்திருக்கிறது. பீகாரில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால் சட்டரீதியாக எவ்வித தடைகளும் இல்லை என்பதும் தெளிவாகிறது.

பீகாரை தொடர்ந்து அந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்து அதற்கான பணிகள் டிசம்பர் 9ம் தேதி தொடங்கும் என அறிவித்திருக்கிறது. கர்நாடகா, ஒடிஷா மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியிருக்கும் நிலையில் தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் தன்னிச்சையாகவே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு சுதந்திரமடைந்த பிறகும் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் உரிய இடங்களை பெற முடியவில்லை என்ற ஏக்கம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இன்றளவும் இருந்து வருகிறது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்வது மட்டுமின்றி தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது கட்டாயமாகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியின மக்கள் வளர்ச்சிக்கும் அவர்களின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியமான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஆணையை பிறப்பித்து, போதுமான நிதியை ஒதுக்கி, அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


மக்கள் கருத்து

சாதிNov 28, 2023 - 07:04:15 PM | Posted IP 172.7*****

வெறி தான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital



Thoothukudi Business Directory