» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
வெள்ளி 26, மே 2023 11:40:15 AM (IST)
தமிழ்நாட்டில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்தது. இதையடுத்து திருச்சியில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பிறகு பள்ளிகள் திறக்க இரண்டு தேதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் எந்த தேதியை முதல்வர் தேர்வு செய்கிறாரோ அந்த தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறியிருந்தார்.
கோடை விடுமுறை என்பது மாணவர்களை ஆசுவாசப்படுத்தக் கூடிய காலம். கோடை விடுமுறை காலத்திலும் மாணவர்களுக்கான பாடங்களை நடத்துவதை தனியார் பள்ளிகள் தவிர்க்க வேண்டும். இதை வேண்டுகோளாக முன்வைக்கின்றேன். ஆங்கில பயிற்சி, நீச்சல், விளையாட்டு போன்ற திறமைகளுக்கான காலமாக கோடை விடுமுறையை பயன்படுத்துங்கள் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் முதல்வரின் முடிவின்படி தமிழ்நாட்டில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.