» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் ரெய்டு: பெண் அதிகாரியிடம் திமுகவினர் வாக்குவாதம்!

வெள்ளி 26, மே 2023 10:31:43 AM (IST)



கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டிற்கு சோதனைக்கு சென்றபோது பெண் அதிகாரியிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கரூரில் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித் துறை பெண் அதிகாரி ஒருவர் சோதனைக்காக செல்ல முயன்றார். அப்போது அவரது அடையாள அட்டையை காண்பிக்குமாறு அங்கிருந்த திமுகவினர் கேள்வி கேட்டனர். இதனால் திமுகவினருக்கும் பெண் அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது அந்தப் பெண் அதிகாரி, குமார் என்ற திமுக தொண்டரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.  இதில் காயமடைந்த திமுக தொண்டர் குமார் திடீரென மயக்கம் அடைந்தார். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திமுகவினர் கருரில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதனிடையே குமாரை தாக்கிய பெண் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறி திமுகவினர் அவரது காரை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர காவல் நிலையத்தினர் திமுகவினரை சமாதானம் செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து காருடன் பெண் அதிகாரியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. முன்னதாக  பெண் அதிகாரி வந்த கார் கண்ணாடி  மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.

40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் அமைச்சராக இருந்தபோது வேலைக்கு லஞ்சம் வாங்கியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு தற்போது இந்த  வழக்கு உச்சநீதிமன்றத்தால் மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து கரூரில் ராமேஸ்வரப் பட்டியில் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் வீடு, கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வீடுகளில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அதுபோல டாஸ்மாக் ஒப்பந்ததார்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னை, கோவை, கரூர் என தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory