» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் முழுவதும் 18 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு

சனி 25, மார்ச் 2023 11:12:25 AM (IST)

தமிழகம் முழுவதும் 18 லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவுகள் 8 மாதங்களுக்கு பிறகு நேற்று வெளியானது. 

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 6 வகையான பணியிடங்கள் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு (2022) தொடக்கத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.

அதன்படி, முதலில் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் நடந்தது.

விண்ணப்பித்து இருந்தவர்களில், 18 லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் தேர்வை எதிர்கொண்டனர். அறிவிப்பு வெளியிடப்பட்ட போது, தேர்வு முடிவு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு முடிவு அக்டோபர் மாதத்தில் வெளியாகவில்லை. அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டது. அப்போதும் முடிவு வெளியிடப்படவில்லை.

தொடர்ந்து தேர்வு முடிவு தாமதமானதால், தேர்வர்கள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து தேர்வு முடிவு வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்துக்கான காரணத்தையும், மார்ச் மாதத்துக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்பதையும் திட்டவட்டமாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டுவிட்டரில் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடக்கோரி தேர்வர்கள் 'ஹேஷ்டேக்' செய்திருந்தனர். 

அதைத்தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. கண்டிப்பாக மார்ச் மாதத்துக்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவித்தது. இதற்கிடையில், 7 ஆயிரத்து 301 காலிப்பணியிடங்களை 10 ஆயிரத்து 117 இடங்களாக அதிகரித்தும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்தபடி, குரூப்-4 பதவிகளுக்கான எழுத்து தேர்வு முடிவை நேற்று வெளியிட்டு இருக்கிறது. சரியாக 8 மாதங்களுக்கு பிறகு தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற டி.என்.பி.எஸ்.சி. இணையதளங்களை பார்த்து அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory