» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு: பணிப்பெண் சிக்கினார்

செவ்வாய் 21, மார்ச் 2023 5:02:15 PM (IST)

நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரிலிருந்த தங்கம், வைரம், வைடூரியம் என 60 பவுன் நகைகள் திருடுபோயின. இது தொடர்பாக வழக்குப் பதிந்த போலீஸார் வீட்டு பணிப் பெண் ஒருவரைப் பிடித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர், தமிழில் ‘3’, ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களில் இயக்குநராக இருந்துள்ளார். நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது இத்தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர். ஐஸ்வர்யா தற்போது விஷ்ணு விஷால் முதன்மை கதாபாத்திரத்திலும், நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்திலும் நடிக்கும் ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், "போயஸ் கார்டனில் உள்ள எனது தந்தை ரஜினிகாந்த் வீட்டில் வசித்து வருகிறேன். 2019-ம் ஆண்டு எனது தங்கைக்கு திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து எனக்கு சொந்தமான நகைகளை தனியாக லாக்கரில் வைத்து பராமரித்து வருகிறேன்.

அந்த லாக்கரில் 60 பவுன் தங்க, வைர நகைகள் மற்றும் பாரம்பரிய நகைகள் இருந்தன. கடந்த 2021-ம் ஆண்டு வரை ஆழ்வார்பேட்டை செயின்ட்மேரிஸ் சாலையில் வசித்து வந்த வீட்டில் நகைகள் இருந்தன. பின்னர் கணவருடன் வசித்து வந்த சிஐடி நகரில் உள்ள வீட்டில் குடியேறியபோது அங்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து தற்போது போயஸ் கார்டனுக்கு குடியேறி வசித்து வருகிறேன். லாக்கர் மாறி மாறி 3 வீடுகளிலும் வைக்கப்பட்டிருந்தது.

செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நான் இருந்தபோது லாக்கர் சாவியை எனது அலமாரியில் வைத்திருப்பேன். இது எனது வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண்களான ஈஸ்வரி, லட்சுமி, கார் ஓட்டுநர் வெங்கட் ஆகியோருக்கு தெரியும். நான் வீட்டில் இல்லாத நேரத்திலும் அவர்கள் அங்கு சென்று வந்துள்ளனர்.

கடந்த மாதம் 10-ம் தேதி லாக்கரை நான் திறந்து பார்த்தபோது அதில் சில நகைகள் மட்டுமே இருந்தன. மதிப்பு மிக்க பல நகைகள் காணவில்லை. இந்த நகைகள் அனைத்தும் திருமணத்துக்கு முன்னும், பின்னும் என 18 ஆண்டுகளாக வாங்கப்பட்டவையாகும். ஒரு ஜோடி வைரம் மற்றும் பழங்கால தங்க நகைகள், நவரத்தின நகைகள், பழங்கால வைரம், ஆரம்,நெக்லஸ், வளையல்கள் உட்பட 60பவுன் நகைகள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பாக எனது வீட்டில்பணி செய்யும் 2 பணிப்பெண்கள் மற்றும் கார் ஓட்டுநர் மீது சந்தேகம்உள்ளது.

இது தொடர்பாக உரியவிசாரணை நடத்தி திருடுபோன எனது நகைகளை மீட்டுத் தர வேண்டும்” என்று புகாரில் குறிப்பிட்டு இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். புகாரின் பேரில் தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் இளங்கனி விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

ஐஸ்வர்யா, திருடுபோன நகைகள் சிலவற்றை அடையாளம் காட்டும் வகையில் தனது சகோதரியின் திருமணம் உட்பட மேலும் சில நிகழ்ச்சிகளில் அணிந்திருந்த புகைப்படங்களை போலீஸாரிடம் கொடுத்துள்ளார். அதையும் அடிப்படையாக வைத்து போலீஸார் துப்புத்துலக்கி வருகின்றனர்.

முதல் கட்டமாக பணிப்பெண்கள், கார் ஓட்டுநர் போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்நிலையில், நகை திருடுபோன வழக்கில் பணிப்பெண்ணான ஈஸ்வரி என்பவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும், அவரிடமிருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த நகைகள் கடந்த 4 ஆண்டுகளாக சிறிது சிறிதாக திருடப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நகைகளை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory