» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேதா நிலையம் ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றம்- 28ம் தேதி திறப்பு விழா

திங்கள் 25, ஜனவரி 2021 5:35:07 PM (IST)

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் ‘வேதா நிலையம்’ இல்லத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 28‍ம் தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கிறார்.

தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

அதை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி அறிவித்தார். இதையடுத்து போயஸ் கார்டன் வீட்டை அரசு கையகப்படுத்தியது. அதனை நினைவு இல்லமாக ஆக்குவதற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பில் ரூ.68 கோடி செலுத்தப்பட்டு ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை மாவட்ட கலெக்டர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் போயஸ் கார்டன் இல்லத்தில் 3 கட்டமாக ஆய்வு மேற்கொண்டனர். ஜெயலலிதா இல்லத்தில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யலாம் என்பது குறித்து ஆராய்ந்து இந்த குழுவினர் அரசுக்கு பரிந்துரைத்தனர்.

இந்த பரிந்துரைபடி ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணியை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. வீடு முழுவதும் வர்ணம் அடிக்கப்பட்டு என்னென்ன பொருட்களை எங்கெங்கு வைக்கலாம் என்று பட்டியலிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது. 10 கிரவுண்டு பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ள இந்த இல்லத்தில் நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப்பொருட்களும் அடங்கும்.

4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடை கொண்ட 867 வெள்ளிப்பொருட்களும், வெள்ளி பாத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், ஜெயலலிதாவின் ஆளுமையை பிரதிபலிக்கும் பொருட்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவு பொருட்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் இங்கு காட்சிபடுத்தப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பொருளும் கண்ணாடி பேனல்களுக்குள் காட்சிப்படுத்தப்படவில்லை. நேரடியாக பொதுமக்கள் பார்க்கும் வகையில் வைக்கப்படுகின்றன. இந்தநிலையில் ஜெயலலிதா வாழ்ந்த அரசுடைமை ஆக்கப்பட்டுள்ள போயஸ் கார்டன் ‘வேதா நிலையம்’ இல்லத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கிறார்.

நிகழ்ச்சிக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலை வகிக்கிறார். தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் க.மணிவாசன், தலைமை செயலாளர் க.சண்முகம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.ஜெயலலிதா நினைவு இல்லத்தில் உள்ள பொருட்களை வருகிற 28-ந்தேதி முதல் பொதுமக்கள் பார்க்கலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory