» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நடிகர் ஜி.பி.முத்துவின் தம்பி மனைவி உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு – 18 பேர் மீது வழக்குப் பதிவு!

சனி 25, ஜூலை 2026 8:01:40 AM (IST)

உடன்குடி அருகே கோயில் கட்டுவது தொடர்பான தகராறில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பிரபல யூடியூபரும் நடிகருமான ஜி.பி.முத்துவின் தம்பி மனைவி உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 18 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் பேச்சிமுத்து என்ற ஜி.பி.முத்து (45). யூடியூபரான இவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே கோயில் கட்டுவது தொடர்பாக, அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே நீண்டநாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி நள்ளிரவில் ஜி.பி.முத்து மற்றும் அவரது தம்பி இசக்கிமுத்து ஆகியோரது வீடுகளின் முன்பாக சிலர் கோழியை அறுத்து பலி கொடுத்து பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த ஜி.பி.முத்துவின் குடும்பத்தினர் அங்கு சென்று எதிர்ப்பு தெரிவித்துத் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிப் பலத்த மோதல் உருவானது.

இந்த மோதலின் போது, எதிர்தரப்பைச் சேர்ந்த சிலர் இரும்புக்கம்பி, பிளாஸ்டிக் நாற்காலி மற்றும் அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் ஜி.பி.முத்துவின் தம்பி மனைவி அனிதா மற்றும் உறவினர் இளையபெருமாள் ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த இருவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஜி.பி.முத்து அளித்த புகாரின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த பரமசிவன், மாடசாமி, ஆத்திசெல்வம், வேம்புநாதன், முத்துகிருஷ்ணன், மகேஷ், சுந்தரவேல், சுடலையாண்டி ஆகிய 8 பேர் மீது குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

அதேபோன்று எதிர் தரப்பைச் சேர்ந்த முத்து மகேஷ், சுந்தரவேல், மாடசாமி, ஆத்திசெல்வம் ஆகியோரைத் தாக்கியதாக ஜி.பி.முத்து, அவரது தந்தை கணேசன், மனைவி அஜிதா, தம்பி மனைவி அனிதா, இளையபெருமாள், வேல்முருகன் மற்றும் ஜி.பி.முத்துவின் குழந்தைகள் உட்பட 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, நடிகர் ஜி.பி.முத்து வீட்டின் அருகே இரு தரப்பினரும் பிளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் ஆயுதங்களால் வீசியும் தாக்கியும் மோதிக்கொண்டக் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்துக் குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory