» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை: 10 வயது சிறுமிக்கு லேப்ராஸ்கோபி மூலம் பித்தப்பை அகற்றம்!

புதன் 22, ஜூலை 2026 7:57:31 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபி முறையில் பித்தப்பையை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து குழந்தைகள் அறுவை சிகிச்சைத் துறை மருத்துவர் முத்துக்குமரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி அருகே கோவங்காட்டையைச் சேர்ந்த கதிரேசனின் 10 வயது மகள் முத்துமாரி, கடுமையான வயிற்று வலி, வாந்தியால் பாதிக்கப்பட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்த போது, மஞ்சள்காமாலை, பித்தப்பை, பித்த நாளத்தில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு இ.ஆர்.சி.பி (ERCP) சிகிச்சை முறை மூலம் கற்கள் அகற்றப்பட்டு, பித்தப் பாதையில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டு சி.பி.டி ஸ்டென்ட் (CPD Stent) வெற்றிகரமாக வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாகச் சிறுமிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், பித்தப்பையை அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி சிறுமிக்குக் 'கீஹோல்' (Keyhole) எனப்படும் நவீன லேப்ராஸ்கோபி முறையில் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது.

தற்போது சிறுமி முழுமையாகக் குணமடைந்து நலமுடன் உள்ளார். பித்தப்பை அகற்றப்பட்டதால் சிறுமிக்கு எவ்விதப் பக்கவிளைவுகளும் பாதிப்புகளும் ஏற்படாது. தென்தமிழகத்திலேயே இத்தகைய நவீன அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் முதன்முறையாகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் செய்யப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி டீன் எபனேசர் ஜோயல் குமார் வழிகாட்டுதலில் குழந்தைகள் அறுவை சிகிச்சைத் துறை, குடல்-இரைப்பை பிரிவு, மயக்கவியல் பிரிவு மருத்துவர்கள் இணைந்து இச் சிகிச்சையை இலவசமாகச் செய்து முடித்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் அதிகச் செலவாகும் இக் கிஹோல் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளத் தேவையான அனைத்து அதிநவீன கருவிகளும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ளதால் பொதுமக்கள் இச் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். 

பேட்டியின் போது மருத்துவக் கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, குடல்-இரைப்பை பிரிவு மருத்துவர் சாய்ராமன், மயக்கவியல் பிரிவு மருத்துவர் பலராம் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory