» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனுத்தொகை மங்கலம்: கடல் கொண்ட பாண்டிய நாட்டுப் பெருநகரின் மர்மம்!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 11:07:27 AM (IST)



தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையான மன்னார் வளைகுடா பகுதியில் ஆழிப்பேரலையாலும், நதிமாற்றங்களாலும், சூறாவளியாலும் மறைந்து போன ஒரு மாபெரும் வணிக நகரத்தின் பெயர் 'அனுத்தொகை மங்கலம்'. 

'ஷஹாதத்நாமா' எனப்படும் பார்ஸீ கிரந்த வடிவத்தின் தமிழாக்கமாக 1953ம் ஆண்டு வெளியான 'சஹீது சரிதை' நூல் வழங்கிய பொ.ஊ.1195ம் ஆண்டு சுல்தான் செய்யது இப்ராஹிம் அவர்களின் இறப்பிற்குப் பின்(கீழக்கரை -ஏர்வாடி தர்கா) 100 ஆண்டுகள் கழித்து அதாவது பொ.ஊ.1295 - 1300க்கு இடையில் ஒரு பெரும் நகரமான 'அனுத்தொகை மங்கலம் 'ஆழிப்பேரலையால் அழிவுற்ற குறிப்புகளின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ்ப்பட்டினம்(தருவைக்குளம் பகுதியில்) கடற்பரப்பில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் வியக்கத்தக்க உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன.

சங்க இலக்கியமும் தொகை மங்கலமும்: 'தொகை மங்கலம்' என்ற நேரடிச் சொல் சங்க இலக்கியங்களில் பயின்று வராவிட்டாலும், அதன் உட்பொருள் சங்க காலப் புவியியலோடு பின்னிப் பிணைந்தது:

தொகை (சங்கமம்): ஆறுகள் கடலில் புகும் 'முகத்துவாரத்தை' அல்லது கிளை ஆறுகள் ஒன்று கூடும் இடத்தை 'தொகை' என அழைக்கும் மரபு சங்க இலக்கியத்தில் உண்டு. (உதாரணம்: மதுரைக்காஞ்சியில் வளங்கள் குவியும் இடமாக 'தொகை' குறிக்கப்படுகிறது).

மங்கலம்: வளமான குடியிருப்புகளைக் குறிக்கும் இப்பெயர், புகலூர் மற்றும் மாங்குளம் கல்வெட்டுகளில் சான்றாக உள்ளது.

அனுத்தொகை: 'அனு' (பின்தொடர்ந்து வருதல்) + 'தொகை' (சங்கமம்). இது 'பட்டினப்பாலை' விவரிக்கும் காவிரிப் பூம்பட்டினத்தின் 'புகார்' (Estuary) என்ற சொல்லாடலுக்கு நிகரானது.

இராபர்ட் ஓர்மே வரைபடமும் மூழ்கிய நிலப்பரப்பும்: 1778-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் வரைபடவியலாளர் இராபர்ட் ஓர்மே (Fellow of Antiquaries of London) வரைந்த இரகசிய வரைபடம் இந்த ஆய்வின் 'திறவுகோல்' ஆகும்.

நதிச் சங்கமம்: தற்போது தடம் மாறி போன 'மலட்டாறு' அல்லது 'கௌசிக மகாநதி’ என மாநகராட்சி ஆவணங்கள் வாயிலாக அறியப்படும் முகத்துவார எச்சங்களானது அக்காலத்தில் செங்கோட்டை வடகரையில் இருந்து அனுமன் நதியாகவும், தென்காசி இலஞ்சியில் இருந்து சிற்றாறாகவும் முறம்பன் பகுதியில் ஒன்றாக இணைந்து, கீழ்பட்டினம் (தருவைக்குளம்) அருகே கடலில் கலந்ததை ஓர்மே புவியியல் புள்ளிகளுடன் ஆவணப்படுத்தியுள்ளார். குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சியின் குப்பை கழிவுகளை கையாளும் போது வெளியிடப்படும் நீரானது கலக்கப்படும் இந்த முகத்துவாரத்தின் பகுதியானது 'கௌசிக் மகாநதி' என எதோ ஒரு வகையில் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருவது இந்த இந்த நதி ஒரு மகாநதியாக விளங்கியது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

பச்சை நிறத் தீவு: கரையில் இருந்து 1 கி.மீ தொலைவிற்குள் ஓர்மே பச்சை நிறத்தில் அடையாளப்படுத்திய தீவு, தற்போது கடலுக்குள் மூழ்கியுள்ளது. இந்த தீவு குறித்த எந்த வருவாய் துறை பதிவுகளிலும் இல்லை.

பரப்பளவு: வான் தீவு, கரசேவர் தீவு(கொசுவார்) மற்றும் மூழ்கிய தீவு ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய சுமார் 11,000 ஏக்கர் நிலப்பரப்பே 'அனுத்தொகை மங்கலம்' என அழைக்கப்பட்டுள்ளது என்பது புலனாகிறது. இந்த பகுதியில் கடல்சார் அகழாய்வு மேற்கொள்ள மாநில தொல்லியல் துறைக்கு மாவட்ட ஆட்சியர் வாயிலாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அழிவின் காலவரிசை மற்றும் வரலாற்றுச் சான்றுகள்: பொ.ஊ. 1292: மார்க்கோ போலோ கீழ்பட்டினத்திற்கு வருகை புரிந்தபோது, இத்தீவுப் பகுதிகள் செழிப்பான வணிக மையமாகத் திகழ்ந்தன.பொ.ஊ. 1295 - 1300: இக்காலக்கட்டத்தில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தினால் இப்பகுதி முதன்முதலில் பாதிப்புக்குள்ளானது.

பொ.ஊ. 1480: 'இராமநாடு மேனுவல்' குறிப்பிடும் மாபெரும் சூறாவளி, மன்னார் வளைகுடாவின் புவியமைப்பை மாற்றியும், புதியதாக பாண்டியன் தீவு மற்றும் புன்னையடி தீவு போன்ற சில தீவுகளை உருவாக்கியும், பல பண்டைய அடையாளங்களை மூழ்கடித்தது. 

கங்கைகொண்டானின் இந்திரகுளம்:15-16-ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியன் வெட்டிய 'இந்திரகுளம்' (1100 ஏக்கர்) தற்போது எஞ்சியுள்ள சிதைவுகளுக்கு ஒரு சான்றாகும்.

கள ஆய்வின் முடிவுகள்: கீழ்பட்டினம்(தருவைக்குளம் - பட்டினமருதூர்) கடற்கரையில் அலைகளால் அடித்து வரப்படும் தேய்வுற்ற மட்பாண்டச் சிதைவுகள் மற்றும் விலங்கியல் படிமங்கள் குறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறைப் பேராசிரியர் சுதாகர் அவர்கள் தனது அறிவியல் ரீதியான சந்தேகத்தைப் பதிவு செய்துள்ளார். தற்போது மாநில தொல்லியல் துறையால் பட்டினமருதூர் கடற்கரை பகுதியில் சுமார் 500மீட்டர் அகலம், 2900மீட்டர் நீளம் கொண்ட சுமார் 300ஏக்கர் பரப்பளவில் தொல்லியல் அகழாய்வு நடைபெற்று வருகிறது என்பது கூடுதல் சிறப்பு.

அமாவாசை தினங்களில் என்னால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தீவுகளை உள்ளடக்கிய இக்கடல் பகுதி வெறும் 4 முதல் 6 அடி ஆழம் மட்டுமே கொண்டிருப்பது, அங்கு ஒரு மாபெரும் நிலப்பரப்பு மூழ்கிக் கிடப்பதை உறுதிப்படுத்துகிறது.

கோரிக்கைகள்: தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களின் பரிந்துரைகள் படி நாங்கள் சமர்ப்பித்துள்ள கோரிக்கைகள் மீதான இராமநாதபுரம் கடல்சார் வனவிலங்கு காப்பகத்தின் முன் அனுமதி மற்றும் ஒத்துழைப்பு கிடைத்தால், MS University தொல்லியல் துறையினர், ZSI (இந்திய விலங்கியல் கணக்கீடு) விஞ்ஞானிகள், CMFRI ஆய்வாளர்கள் மற்றும் ஸ்கூபா டைவிங் வல்லுநர்கள் இணைந்து ஒரு விரிவான மேற்பரப்பில் ஆய்வை மேற்கொள்ளத் தயாராக உள்ளோம். மேலும் இந்த ஆய்வு, கீழ்ப்பட்டினம் முதல் சிப்பிக்குளம் வரையிலான மறைக்கப்பட்ட பாண்டிய நாட்டு வரலாற்றை உலகிற்கு உரக்கச் சொல்லும் என்றார்.

ஆய்வு மற்றும் தொகுப்பு: 
பெ. இராஜேஷ் செல்வரதி, 
தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory