» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எட்டயபுரம் அரண்மனையில் பாரதியார் மார்பளவு வெண்கல சிலை திறப்பு விழா

திங்கள் 8, டிசம்பர் 2025 8:34:20 AM (IST)



எட்டயபுரம் அரண்மனையில் பாரதியார் மார்பளவு வெண்கல சிலையை தொழில் அதிபர்கள் வி.ஜி.சந்தோசம், நல்லிகுப்புசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அரண்மனையில் மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்த நாளையொட்டி வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியாரின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதையொட்டி பாரதியார் வீட்டில் இருந்து அரண்மனைக்கு தேவராட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் பாரதி ஜதி பல்லக்கு ஊர்வலம் புறப்பட்டது.

இந்த ஊர்வலத்தை ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. நட்ராஜ் தொடங்கி வைத்தார். பல்லக்கில் வந்த பாரதியார் சிலைக்கு எட்டயபுரம் மகாராஜா சந்திர சைத்தன்யா, பொற்பை, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அந்த பொற்பை மற்றும் சால்வை பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதிக்கு அணிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தொழில் அதிபர்கள் வி.ஜி.சந்தோசம், நல்லி குப்புசாமி ஆகியோர் பாரதியார் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து ‘வீரம் தழைக்கும் மண்’ கருத்தரங்க கட்டுரை தொகுப்பு நூலை கிருஷ்ணா சுவீட்ஸ் முரளி வெளியிட்டார். அதன் முதல் பிரதியை பேச்சாளர் சுகிசிவம் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து ‘பாரதி ஐந்து’ என்ற நிகழ்ச்சியில் சென்னை மகந்தி அகாடமி மாணவ-மாணவிகள் 50 பேர் கலந்துகொண்டு பாடல் பாடினர். மேலும் பாரதி நடனம், கோலாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வானவில் பண்பாட்டு மைய நிறுவன தலைவர் வக்கீல் ரவி வரவேற்று பேசினார்.

விழாவில் சுகிசிவம் பேசுகையில், ‘‘எட்டயபுரம் நகர வீதியில், அதாவது பாரதி வீடு இருந்த தெருவில் நடந்து வந்ததை பெருமையாக கருதுகிறேன். பாரதி கண்ட கனவு 120 ஆண்டுகள் கழித்து நிறைவேறி உள்ளது.

ஒருவன் இறந்த பிறகு கிடைக்கும் புகழ்தான் நிலையான புகழாகும். பாரதி மறைந்த பிறகும் அவருடைய கருத்தும், கவிதையும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது’’ என்றார்.

வி.ஜி.சந்தோசம் கூறுகையில், ‘‘உலகை தமிழால் உயர்த்திடுவோம். பாரதியின் கவிதைகள் ஆற்றல் உடையவை. அவர் ஒரு தீர்க்கதரிசி. நாடு நிச்சயம் சுதந்திரமடைந்துவிடும் என நினைத்து ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று பாடல் பாடி உள்ளார். அவருக்கு நாம் மேலும் புகழ் சேர்க்க வேண்டும். நாங்கள் தொழில் செய்வதோடு தொண்டும் செய்கிறோம். பல்வேறு இடங்களில் திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளோம்’’ என்றார்.

எட்டயபுரம் மகாராஜா சந்திர சைத்தன்யா பேசுகையில், ‘‘பாரதிக்கு விழா எடுத்து அவரை ஜதி பல்லக்கில் தூக்கி வந்து பொற்பை, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியதை, அதாவது அவருடைய கனவை நிறைவேற்றியதை பெருமையாக கருதுகிறேன்’’ என்றார்.

இந்த விழாவில் கிளிமண்ணூர் மகாராஜா ராமவர்வா தம்புரான், வானவில் பண்பாட்டு மைய துணை தலைவர் குமரிச்செழியன், அமைப்பாளர் சோபனா ரமேஷ், பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி, விவேக் பாரதி, எட்டயபுரம் பேரூராட்சி தலைவி ராமலட்சுமி சங்கரநாராயணன், தி.மு.க. மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் சவுந்திரராஜன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் சத்தியமூர்த்தி, குச்சனூர் சனீஸ்வரா அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ராஜேந்திரன், சிங்கப்பூர் பேராசிரியர் ஸ்ரீ லட்சுமி, எட்டயபுரம் அரண்மனை மேலாளர் மாரியப்பன், தமிழ்நாடு மாநில அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் தொழிலாளர் நலச்சங்க மாநில தலைவர் சேர்மத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory