» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கை மக்களுக்கு புயல் நிவாரண பொருட்கள் : தூத்துக்குடியில் இருந்து கப்பலில் அனுப்பி வைப்பு

சனி 6, டிசம்பர் 2025 3:45:12 PM (IST)



டித்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் பருப்பு, சர்க்கரை, பால்பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை கப்பலில் அனுப்பிடும் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (6.12.2025) ‘டித்வா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு, நெருக்கடியில் சிக்கித் தவித்து இன்னலுறும் இலங்கை வாழ் மக்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் உதவிடும் வகையில் சென்னை துறைமுகத்திலிருந்து 650 மெட்ரிக் டன்னும், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 300 மெட்ரிக் டன்னும், என மொத்தம் 950 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் மூலம் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில், தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களின் மாதிரி தொகுப்பினை இலங்கை துணைத் தூதர் டாக்டர்.கணேசநாதன் கீதீஸ்வரன் அவர்களிடம் முதலமைச்சர் வழங்கினார்.

‘டித்வா’ புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைவாழ் மக்களுக்கு உதவக்கூடிய வகையில், சென்னை துறைமுகத்திலிருந்து 300 மெட்ரிக் டன் சர்க்கரை, 300 மெட்ரிக் டன் பருப்பு, 25 மெட்ரிக் டன் பால்பவுடர், 25 மெட்ரிக் டன் கொண்ட 5000 வேட்டிகள், 5000 சேலைகள், 10,000 துண்டுகள், 10,000 போர்வைகள் மற்றும் 1000 தார்பாலீன்கள் ஆகிய நிவாரணப் பொருட்களையும் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 150 மெட்ரின் டன் சர்க்கரை, 150 மெட்ரிக் டன் பருப்பு உள்ளடக்கிய நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இப்பணிகள் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், கைத்தறி துறை மற்றும் வேளாண்மை-உழவர் நலத்துறை ஆகிய துறைகள் மூலம் ஒருங்கிணைந்து சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிகழ்வில், சென்னை துறைமுகத்தில், இலங்கை துணைத் தூதர் டாக்டர்.கணேசநாதன் கீதீஸ்வரன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் சதீஷ் எம். செனாய், பொதுத்துறைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர், சென்னை துறைமுகத்தின் தலைவர் விஸ்வநாதன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் முனைவர் மா.வள்ளலார், பொதுத்துறை கூடுதல் செயலாளர் பாலசுப்ரமணியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரா.ஐஸ்வர்யா, கமோடர் அனில்குமார், கடற்படை ஸ்டேசன் கமாண்டர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory