» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையம் : பிரதமா் மோடி திறந்து வைத்தார்!

சனி 26, ஜூலை 2025 9:52:07 PM (IST)



தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.452 கோடி செலவில் உருவாக்கப்பட்ட புதிய முனையக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்து வைத்தார்.

தூத்துக்குடியில், விமான நிலைய புதிய முனைய கட்டடம், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் ஆகியவை தொடர்பான ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதுடன், நிறைவுற்றப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு பயணத்திலிருந்து திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.452 கோடி செலவில் உருவாக்கப்பட்ட புதிய முனையக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்துவைத்து, கட்டடத்தை பார்வையிட்டார்.

மேலும், ரூ.548 கோடியில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அலகு 3, 4ஆவது பிரிவுகளில் மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சிதம்பரனார் துறைமுகத்தில், ரூ. 285 கோடி மதிப்பில், ஆண்டுக்கு 6.96 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட வடக்கு சரக்கு கப்பல் நிறுத்துமிடம்-ஐஐஐ தொடங்கிவைத்தார்.

ரூ.2,357 கோடியில் அமைக்கப்பட்ட சேத்தியாதோப்பு-சோழபுரம் பகுதி நான்குவழிச் சாலை, ரூ.200 கோடியில் 6 வழிச்சாலையாக மாற்றப்பட்ட தூத்துக்குடி துறைமுக சாலை, ரூ.650 கோடி மதிப்பீட்டில் நாகர்கோவில் டவுன்-நாகர்கோவில் சந்திப்பு-கன்னியாகுமரிக்கு 21 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில்பாதை, ஆரல்வாய்மொழி நாகர்கோவில் சந்திப்பு - திருநெல்வேலி மேலப்பாளையும் ரயில் பாதையை இரட்டிப்பாக்குதல்,

ரூ.99 கோடி மதிப்பீட்டில் மதுரை-போடிநாயக்கனூர் இடையே 90 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை ஆகிய முடிவுற்ற பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மத்திய தகவல் - ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.

நிகழ்வில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு, தமிழக நிதி- மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மீன்வளம், மீனவர் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு - வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கனிமொழி எம்.பி., தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக மகளிரணி தேசியத் தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் தளவாய்சுந்தரம், கடம்பூர் செ.ராஜ§, எம்.ஆர்.காந்தி, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விரிவாக்க முனையத்தின் சிறப்புகள்: தூத்துக்குடி விமான நிலையம் 886.3 ஏக்கர் பரப்பளவு உடையது. தற்போதைய முனையக் கட்டடம் 17,340 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த புதிய முனையக் கட்டடம், உச்ச நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு 1350 பயணிகளுக்கும், ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளுக்கும் சேவை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,350 மீட்டர் அளவில் இருந்து வந்த விமான நிலைய ஓடு பாதை தற்போது 3,115 மீட்டர் அளவுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரனில் ஏடிஆர்-72, கியூ-400 விமானத்திற்கான இரண்டு நிறுத்துமிடங்கள் உள்ளன. ஐந்து ஏ-321 வகை விமானங்களை நிறுத்தும் திறன் கொண்ட ஒரு புதிய ஏப்ரனும் கட்டப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து கண்காணிப்பு, கட்டுப்பாட்டு கோபுரம் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன. 18 பயணிகள் செக் இன் கவுன்டர்களும், மூன்று ஏரோ பிரிட்ஜ்களும், 5 எக்ஸ்-பிஸ் இயந்திரங்களும், இரண்டு வருகைக்கான கன்வேயர் பெல்ட்டுகளும், 600 பயணிகள் கார் நிறுத்துவதற்கான வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டடமாக அமைக்கப்பட்டுள்ளது. முனைய கட்டடங்கள் முழுவதும் சூரியசக்தி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆற்றல் சேமிப்பு மின் மற்றும் இயந்திர உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் தோட்டக்கலை உபயோகத்துக்கென மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

வ.உ.சி. துறைமுகம்: இந்தியாவில் ஆண்டு முழுவதும், 24 ஷ் 7 செயல்படக்கூடிய சில துறைமுகங்களுள் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒன்றாகும். சாலை மற்றும் ரயில் மூலம் தடையின்றி இணைக்கப்பட்டுள்ளது. இங்கு 23-7-2025 வரை 13.76 மில்லியன் டன் சரக்குகளும், 2.72.439 டிஇயு சரக்கு பெட்டகங்களையும் கையாண்டு, கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 5.75 சதவீதம் மற்றும் 11.44 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள வடக்கு சரக்கு தளம் ஐஐஐ- ஆனது, ரூ.285 கோடி திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. மிதவை ஆழம் 14.20 மீட்டர் கொண்டது. ஆண்டுக்கு 7 மில்லியன் டன்கள் கையாளும் திறன் கொண்டது. சரக்கு தளத்தின் நீளம் 306 மீட்டர் ஆகும். இங்கு, நிலக்கரி, தாமிர தாது, செம்பு, சுண்ணாம்புக்கல், ஜிப்சம் மற்றும் ராக் பாஸ்பேட் ஆகிய சரக்குகள் கையாளப்படும்.

இது பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், மொத்த சரக்குகளை கையாளும் அளவு மற்றும் திறன் அதிகரிக்கும். இப்பகுதியின் வளர்ந்து வரும் தொழில்துறைக்கு உறுதுணையாக அமையும். நேரடியாக 300 பேருக்கும், மறைமுகமாக 500 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory