» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிகளில் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை முடக்கம்

வியாழன் 10, ஜூலை 2025 7:29:04 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தால்  வங்கிகளில் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர்களை பாதிக்கும் தொழிலாளர் சட்ட தொகுப்பை திரும்ப பெற வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது. 

தூத்துக்குடி மாவட்டத்திலும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மாவட்டத்தில் பஸ், ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம் போல் ஓடின.

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் சுமார் 20 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால் பணிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வ.உ.சி துறைமுகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ரசல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். அதிகாரிகள் மட்டுமே பணிக்கு வந்ததால் வங்கிகளில் பணபரிவர்த்தனை உள்பட பல பணிகள் பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் 120 வங்கி கிளைகளில் பணிபுரியும் சுமார் 1200 ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று உள்ளனர். இதனால் சுமார் ரூ.300 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மத்திய தொழிற்சங்கத்தினரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. மற்றபடி மாவட்டத்தில் பெரிய அளவிலான எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாவட்டத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலைஉடையார், ஆனந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் விவசாயிகள் சங்கத்தினர், மாதர் சங்கத்தினர், இளைஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியில் நேற்று அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம், மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். அதேசமயம், கார்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. கோவில்பட்டி, விளாத்திகுளம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை களில் இருந்து வழக்கம்போல அனைத்து அரசு பஸ்களும் இயக்கப்பட்டன. இந்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இதேபோன்று மாவட்டம் முழுவதும் பஸ்கள், ஆட்டோக்கள், கார்கள் வழக்கம் போல் ஓடின.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory