» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முன்னாள் பஞ்., தலைவியின் கணவர் லாரி ஏற்றி கொலை? உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

செவ்வாய் 24, ஜூன் 2025 5:05:14 PM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவியின் கணவர் முன்விரோதம் காரணமாக லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டதாக கூறி, உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலை அருகே உள்ள கொல்லம்பரும்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். இவரது மனைவி வள்ளியம்மாள் கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை கொல்லம்பரும்பு பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். முத்து பாலகிருஷ்ணன் தற்போது அந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். அதிமுக கிளைக் கழகச் செயலாளராக உள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக திமுகவை சேர்ந்த கருணாகரன் என்பவரது தாய் சந்திரா என்பவர் பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கருணாகரனின் மனைவி கௌரி கொல்லம்ரும்பு பஞ்சாயத்து தலைவியாக பதவி வகித்து வருகிறார். 

இந்நிலையில் அந்தப் பகுதியில் சுமார் 650 ஏக்கரில் கல் குவாரி ஒன்றை ரியல் எஸ்டேட் தொழில் மூலம் ஒரு நபருக்கு முத்து பாலகிருஷ்ணன் முடித்துக் கொடுத்துள்ளார். மேலும் முத்து பாலகிருஷ்ணன் மற்றும் கருணாகரன் இடையே தேர்தல் முன்விரோதம் மற்றும் தொழில் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருணாகரன் ஊரில் வைத்து முத்து பாலகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

மேலும் தனது மனைவி கௌரி பஞ்சாயத்து தலைவியாக இருந்தாலும் கருணாகரனே பஞ்சாயத்து தலைவராக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை முத்துப்பாலகிருஷ்ணன் தனது இருசக்கர வாகனத்தில் சந்திரகிரி அருகே வரும்போது எதிரே வந்த கல்குவாரி டிப்பர் லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்து பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து ஓட்டப்பிடாரம் போலீசார் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முத்து பாலகிருஷ்ணனின் உறவினர்கள் இந்த சம்பவம் விபத்து கிடையாது, அவரை பஞ்சாயத்து தலைவியின் கணவரான கருணாகரன் லாரி ஏற்றி கொலை செய்துவிட்டார். எனவே அவரை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சௌந்தர்ராஜன் என்பவரை ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கருணாகரனை விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory