» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக நேரம் : அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 17, ஜூன் 2025 8:59:51 AM (IST)



திருச்செந்தூர் கோவில் நடைமுறைகள், மரபுகளை பின்பற்றி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரம் குறிக்கப்பட்டு உள்ளதா? என அறநிலையத்துறை ஆணையர் பதில் அளிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜூலை மாதம் 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரம் ஆகமவிதிகளின்படி குறிக்கப்படவில்லை என வீரபாகுமூர்த்தி என்பவர் உள்பட சிலர் மதுரை ஐகோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரத்தை தேர்வு செய்ய குழு அமைத்து உத்தரவிட்டது. அதன்படி கும்பாபிஷேகத்தை வருகிற 7-ந்தேதி அன்று காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை நடக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதற்கிடையே கும்பாபிஷேக நேரம் அறிவிப்பை மறுசீராய்வு செய்ய உத்தரவிடக்கோரி, சிவராமசுப்பிரமணிய சாஸ்திரிகள், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 7.7.2025 அன்று காலை 6.15 மணி முதல் காலை 6.50 மணி வரை என நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதற்கு பதிலாக 7.7.2025 பகல் 12.05 மணி முதல் 12.47 மணி வரை தோஷங்கள் இல்லாத நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை கும்பாபிஷேக அழைப்பிதழ்களை வழங்குவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல், கோவில் நிர்வாகம் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, இதே கோரிக்கையுடன் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு ஆடம்பர நோக்கத்துடன் தாக்கலான மனு என கருத்து தெரிவித்தார். அதுபோல இந்த சீராய்வு மனுவும் விசாரணைக்கு ஏற்புடையது அல்ல என்றனர்.

அப்போது மனுதாரர் வக்கீல் வாதிடுகையில், கோவிலின் ஆகமம், மரபுகளை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் எந்த சுயநலமும் இல்லை என வாதாடினார். விசாரணை முடிவில், கோவில் நடைமுறைகள், மரபுகளை பின்பற்றி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரம் குறிக்கப்பட்டு உள்ளதா? என்பது பற்றி இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory