» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சீமானின் கள் இறக்கும் போராட்டத்தை தடை செய்ய காவல்துறை தவறியது ஏன்? டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி

திங்கள் 16, ஜூன் 2025 11:25:59 AM (IST)



சீமானின் கள் இறக்கும் போராட்டத்தை தடை செய்ய காவல்துறை தவறியது ஏன்? என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் - தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "20 அடி உயரமுள்ள குட்டையான பனை மரத்தைத் தேர்வு செய்து முன்கூட்டியே மிகவும் பாதுகாப்பாக பலமான கயிறுகளால் உருவாக்கப்பட்டிருந்த ஏணி படிக்கட்டுகளில் விறுவிறுவென ஏறி, ஏற்கனவே தயாராக வைக்கப்பட்ட ‘கள்ளை’ இறக்கி, அங்கேயே கள்ளைக் குடித்து இன்றைய போராட்ட ஷூட்டிங்கை சீமான் வெற்றிகரமாக முடித்திருக்கிறார். பனையேறி ‘கள்’ இறக்கும் சாதனை வீடியோக்கள் உலகம் முழுவதும் போய்ச் சேர வேண்டியவர்களிடம் விரைந்து சென்று விட்டது. ஒரு வாரக் கணக்கு இன்று நேர் செய்யப்பட்டிருக்கும்.!

கள் இறக்குதல், சாராயம் காய்ச்சுதல் சட்டவிரோதம் எனத் தெரிந்த காவல்துறை சட்ட விரோதமாக ’கள்’ இறக்கும் போராட்டத்தை தடை செய்ய பெரியதாழை பகுதிக்கு காவல்துறை முன்கூட்டியே செல்லாதது ஏன்? அதற்கு தடை விதிக்க மறுத்தது ஏன்? காவல்துறை லாவகமாக தவிர்த்தது ஏன்? என்பதற்கு இன்று இல்லை என்றாலும், நாளை காவல்துறை பதில் சொல்லியே ஆக வேண்டும்.!

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலம் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. 1930 இல் கள்ளுக் கடைகள் திறப்பதை எதிர்த்து காமராஜர் அவர்களே மறியல் செய்து 3 மாத காலம் சிறை சென்றுள்ளார். தந்தை பெரியார் அவர்கள் மது ஒழிப்பை முன்னிலைப்படுத்தி தனது தென்னந்தோப்புகளையே வெட்டி சாய்த்து உள்ளார். அதேபோல் எண்ணற்றோர் கள் உண்ணாமையை வலியுறுத்தி பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ஒழுக்க சீலர்கள்.!

அதேபோன்று கடந்த 15 வருடத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி பெரும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என தமிழகத்தில் போராட்டம் நடக்காத நாளே இல்லை. 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு எங்கும் மதுவிலக்கை வலியுறுத்தி தன்னெழுச்சி மக்கள் போராட்டங்கள் நடைபெற்றன. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை என்ற கிராமத்தைச் சேர்ந்த சசிபெருமாள் என்ற முதியவர் நாகர்கோவிலில் மின் டவரில் ஏறி உயிர் துறந்தார். புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆயிரக்கணக்கான கிராமங்களில் மதுவிற்கு எதிராகப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இன்றைய முதல்வர் ஸ்டாலின், அவரது புதல்வர் உதயநிதி, அவரது சகோதரி கனிமொழியும் திமுக ’ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என வாக்குறுதி அளித்திருந்தனர். நீதிமன்றங்களில் எண்ணற்ற வழக்குகள் தொடுக்கப்பட்டன. படிப்படியாகக் குறைக்கப்படும் என அரசுகள் நீதிமன்றத்திலேயே உறுதி அளித்தனர். மதுவிலக்கு கோரிக்கை தமிழக மக்களின் குறிப்பாக பெண்களின் ஏகோபித்த கோரிக்கையாகும். இந்நிலையில் எல்லோரும் சேர்ந்து அழுத்தம் கொடுத்து 2026 ஆம் தேர்தலுக்கு முன்பாக மதுவிலக்கை அமல்படுத்தச் செய்வதே தமிழக மக்களுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் செய்யும் நன்றிக் கடன்.!

இந்நிலையில் கொழுந்துவிட்டு எரியும் அடுப்பிலிருந்து விறகை பிடுங்கிக் கொள்வதைப் போல திடீரென்று ’கள் ஓர் உணவு - கள் இறக்குவது உரிமை’ என்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்து மது விலக்கு போராட்டத்தை சீமான் நீர்த்துப் போகச் செய்ய முயல்கிறார். ’கள்’ மற்றும் சாராயம் போன்ற போதைப் பொருட்களில் கலப்படம் உள்ளிட்ட பல தவறுகள் நடப்பதால் பல உயிரிழப்புகள் ஏற்படும் என்பதால் தான் தடை செய்யப்பட்டது. !

IMFL இந்தியாவில் உள்நாட்டு மற்றும் அந்நிய நாட்டு மதுபானங்களை டாஸ்மாக் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றன. அந்நிய நாட்டு மதுபானங்கள் எனினும் அதனிலும் உடலுக்கும் உயிருக்கும் பெரும் பாதிப்பு என்பதால் தான் மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் ‘கள் உணவு’ என்று மிக மிகத் தவறான பிரச்சாரத்தை செய்வதுடன், தடையை மீறி ’கள்’ உற்பத்தி செய்வோம் என்பது அராஜகத்தை வெளிப்படுத்துவதாகும்.

கள் இறக்க அனுமதி இல்லை என அறிந்தும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பெரியதாழையில் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கள் இறக்க அனுமதித்தது ஏன்? ’கள் இறக்குவோரை’ கைது செய்தால் காவல் நிலையம் உடைத்தெறியப்படும் என அரிவாளைத் தூக்கிக் காட்டுகிறார். எனவே, காவல் நிலையங்கள் உடைத்தெறியப்படுவதற்கு முன்பாக கள் இறக்க அனுமதி கொடுத்துவிட்டு, அனைத்துக் காவல் நிலையங்களையும் காலி செய்து விட்டுப் போகப் போகிறீர்களா?

தமிழ்நாட்டில் ஒரு பகுதியில் மட்டுமல்ல; அனைத்துப் பகுதிகளிலும் பனை மரங்களும், கோடான கோடி தென்னை மரங்களும் உண்டு. எனவே நாளை முதல் யாருக்கும் பயப்படாமல் பனைமரம், தென்னை மரங்களில் கள் இறக்க முடிவு செய்துவிட்டால் காவல்துறை என்ன செய்யப் போகிறது எனத் தெளிவுபடுத்த வேண்டும். கள் உணவா? அது மதுவா? 'கள் இறக்குதல்' சட்ட உரிமையா? சட்ட மீறலா? என்பதற்கு தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க வேண்டும்.

மேலும், சட்ட விதிமுறைகளை மீறி ’கள் ஓர் உணவு’ என தவறான பிரச்சாரம் செய்யும் சீமான் மற்றும் சட்டவிரோதமாக இன்று ஜூன் மாதம் 15 ஆம் தேதி பெரியதாழையில் ’கள்’ இறக்கியதுடன், அரிவாளை எடுத்துத் தூக்கிக் காட்டி காவல்துறைக்குக் கொலை எச்சரிக்கை செய்த சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 24 மணி நேரத்திற்குள் உரிய வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்படவில்லையெனில், தமிழ்நாடு எங்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக கடும் போராட்டம் வெடிக்கும்.! இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory