» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓட்டப்பிடாரத்தில் புதிய அரசு கலை - அறிவியல் கல்லூரி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
திங்கள் 26, மே 2025 5:56:03 PM (IST)

ஓட்டப்பிடாரத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து இன்று (26.05.2025), உயர்கல்வித் துறை சார்பில் 2025-26ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், கடலூர் மாவட்டம் – பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் – குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் – நத்தம், சென்னை மாவட்டம் – ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் – விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் – செய்யூர், சிவகங்கை மாவட்டம் – மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் – முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் – திருவிடைமருதூர், பெரம்பலுர் மாவட்டம் – கொளக்காநத்தம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் – ஓட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா முன்னிலையில் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது: ஏழை எளிய கிரமப்புற மாணவ – மாணவியர்களின் உயர்கல்வித் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு 2025-2026ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கையில் தமிழகத்தில் 10 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், கடலூரில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி 2025-26ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை இன்றையத்தினம் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்கள். ஓட்டப்பிடாரத்தில் தொடங்கப்பட்டுள்ள இப்புதிய கல்லூரியில் இளங்கலை வணிகவியல், இளங்கலை வணிக நிர்வாகவியல், இளம் அறிவியல் கணினியியல், இளம் அறிவியல் விலங்கியல் (தமிழ் வழி), இளங்கலை வரலாறு (தமிழ் வழி) ஆகிய 5 பாடப்பிரிவுகளுடன் செயல்படவுள்ளது.
ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏழை எளிய கிரமப்புற மாணவ – மாணவியர்கள் பயன்பெறும் வகையில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வருவதற்கு பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டவர் நமது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் . அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு முறையும் மக்கள் சார்ந்த பல்வேறு விதமான கோரிக்கைகளை தொடர்ந்து தீர்த்து வைப்பதற்கு பெறும் முயற்சி எடுப்பவர்.
உயர்கல்வித் துறையை அணுகி இதுபோன்ற பின் தங்கியப்பகுதிக்கு ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைத்து பெற்றுத்தந்திருக்கிறார்கள். இந்த நல்ல முயற்சிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு கல்லூரிகள் இருந்தாலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாத்தான்குளம், கோவில்பட்டி மற்றும் நாகலாபுரம் ஆகிய மூன்று இடங்களில் இருக்கின்றன. அதனோடு சேர்த்து நான்காவதாக ஓட்டப்பிடாரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இன்று முதல் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.
இந்த கல்லூரியில் ஐந்து விதமான படிப்புகளுக்கு விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது. மேலும், www.tngasa.in என்ற இணையதளம் முகவரி வழியாகவும், நேரிலும் மாணவர்கள் விண்ணப்பப்பதிவு செய்து சேர்ந்து கொள்ளலாம். நமது மாவட்டத்தில் மட்டும் 19500க்கும் மேற்பட்ட மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உயர்கல்விக்கு செல்ல தயார்நிலையில் இருக்கிறார்கள். ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் மட்டும் 1453 மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உயர்கல்விக்கு செல்ல தயார்நிலையில் இருக்கிறார்கள். அவர்களில் யாரெல்லாம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயில விரும்புகின்றார்களோ அனைவருக்கும் மாணவர் சேர்க்கை கிடைக்கின்ற வகையில் ஏற்பாடு செய்துதரப்படும் என்று இணை இயக்குநர் (கல்லூரிக் கல்வி) சொல்லி இருக்கிறார்கள். மாணவர்களின் சேர்க்கை சதவீதத்திற்கு ஏற்றார்போல் கட்டிடங்களுடைய உட்கட்டமைப்பு வசதி மென்மேலும் விரிவுபடுத்துவதற்கும் நாம் தயாராக இருக்கிறோம்.
நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு மாணவ – மாணவியர்களும் உயர்கல்வியை அடையாமல் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் சரியான உயர்கல்வி வழிகாட்டுதலை பல்வேறு வழிகளில் வழங்கி வருகிறோம். நான் முதல்வன் கல்லூரிக்கனவு திட்டத்தின் கீழ் ”பெரிதினும் பெரிது கேள்” என்ற கருப்பொருளை மையமாகக்கொண்டு மாணவ – மாணவிகள் அனைவரும் உயர்கல்வியை கண்டிப்பாகப் படித்து ஒரு உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு தொடர் உயர்கல்வி வழிகாட்டுதல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கனவு கட்டுப்பாட்டு அறையில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.
ஒவ்வொரு மாணவர்களும் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு என்னென்ன கல்வியை கற்றால் எந்தெந்த மாதிரியான உயர்ந்த நிலையை அடைய முடியும் என்ற நோக்கத்தில் வழிகாட்டுதல்களை செய்துவருகிறோம். நமது மாணவர்கள் ஒருவர் கூட உயர்கல்வி கற்காமல் இருக்கக்கூடாது என்று நான் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நமது அரசின் நோக்கம், பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக அனைத்து மாணவர்களுக்கும் பல்வேறு உயர்கல்விக்கான உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக, தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் வழியாக மாணவர்களுக்கும், புதுமைப்பெண் திட்டத்தின் வழியாக மாணவிகளுக்கும் உதவிகள் முழுமையாக கிடைக்கப்பெறுகின்றன. வெவ்வேறு விதமான திட்டங்களான கல்வி உதவித்தொகையும் கிடைக்கிறது. எனவே, இங்கு பயிலும் மாணவர்களுக்கு கிட்டத்தட்ட கட்டணமே இல்லாமல் ஒருநிலையில் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்பு இங்கே உள்ளது. நமது மாவட்டத்தில் தனியார் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் அதிகம் இருக்கிறது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மட்டும் கட்டணம் குறைவாக உள்ளது. மற்ற இடங்களில் ஏழை எளிய மாணவர்கள் பயில முடியாத சூழல் இருக்கிறது. ஏழை மாணவர்களுக்கு நமது அரசு முழுமையாக கட்டணமில்லா கல்வியை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாயிலாக கிடைக்கச்செய்கின்றது. ஆகவே, அனைத்து மாணவ – மாணவியர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (கல்லூரிக் கல்வி) ஆர்.ரவீந்திரன், ஓட்டப்பிடாரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கிரேஷா ஜேகப், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் (பொ) செந்தில் வேல்முருகன், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ – மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










