» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புகையிலை விற்ற 12 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

புதன் 22, மே 2024 8:55:26 AM (IST)

புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்த 12 கடைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சீல் வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ச.மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பான்மசாலா மற்றும் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த போலீஸ் துறையும், உணவு பாதுகாப்புத் துறையும் இணைந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கோவில்பட்டி நகராட்சி மற்றும் யூனியன் பகுதிகளில், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு, யூனியன் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்லப்பாண்டி ஆகியோர் அவரவர் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

அப்போது 2 டீக்கடைகள் மற்றும் ஒரு பேக்கரியில் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து மூன்று கடைகளும் மூடி 'சீல்' வைக்கப்பட்டது. கடந்த வாரம் மோட்டார் சைக்கிளில் தடைசெய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்களை கடத்தி, போலீசாரால் கைது செய்யப்பட்ட நபருக்கு சொந்தமான கோவில்பட்டி பகுதியில் உள்ள கடையும் மூடி சீலிடப்பட்டது.

இதே போன்று தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததாக, திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மூலம் பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் திருச்செந்தூர் பகுதியில் உள்ள 8 கடைகளும் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் மூடி 'சீல்' வைக்கப்பட்டு, அந்த கடைகள் உணவு பாதுகாப்பு துறையின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளன. விசாரணை முடிவடைந்த பிறகு, உணவு பாதுகாப்புத்துறை சார்ந்த குற்றம் உறுதி செய்யப்பட்டு, நியமன அலுவலரால் அபராதம் விதித்து உத்தரவிடப்படும். 

அபராத தொகையை கருவூலத் துறையின் இணையதளம் மூலம் செலுத்தி, அதற்கான செலான் நகலை உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பித்த பின்னரே கடைகள் மீண்டும் திறக்கப்படும். தவறினால் அபராதம் செலுத்தும் காலம் வரை கடைகள் மூடி சீல் வைத்த நிலையிலேயே இருக்கும்.

மேலும் ஆய்வின் போது, உணவு வணிகர்கள் எவரேனும் பான்மசாலா, குட்கா, பதப்படுத்தப்பட்ட மெல்லும் புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை அல்லது நிகோட்டின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடையானது உடனடியாக மூடி ‘சீல்’ வைக்கப்படும். ஒரு பாக்கெட் இருந்தாலும் அந்த கடை மூடி ‘சீல்’ வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory