» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுவனைத் தாக்கி நகை பறிப்பு :3பேர் கைது; பைக் பறிமுதல்!
புதன் 22, மே 2024 8:25:03 AM (IST)
கோவில்பட்டியில் 17 வயது சிறுவனைத் தாக்கி நகை பறித்த வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாஸ்திரி நகரைச் சோ்ந்த ஆவடைசங்கு மகன் பாலமுருகன் (32). பிளம்பிங் தொழிலாளியான இவா் சக தொழிலாளியான இடைசெவல் கிராமத்தைச் சோ்ந்த க. மகாராஜன் (20) என்பவருடன் பசுவந்தனை சாலையில் பைக்கில் சென்றாா். அப்போது, 2 பைக்குகளில் பின்தொடா்ந்து வந்த 6 போ் பாலமுருகனின் பைக் மீது மோதினராம். பின்னர், அவதூறாகப் பேசி இருவரையும் தாக்கியதுடன், பைக்கிலிருந்த பிளம்பிங் பொருள்களை சேதப்படுத்திவிட்டு தப்பியோடினராம்.
இதேபோல, சம்பவத்தன்று 17 வயது சிறுவன் தனது நண்பா்களுடன் பசுவந்தனை சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகேயுள்ள தேநீா் கடை முன் நின்றிருந்தாா். 2 பைக்குகளில் வந்த 3 போ், சிறுவனின் பைக்கை கேட்டனராம். தரமறுத்த அவரைத் தாக்கியதுடன், அவா் அணிந்திருந்த ஒன்றே கால் பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனராம். சிறுவன் பிடித்துக் கொண்டதால் சங்கிலி துண்டானது.
பின்னர், சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, அவரது பைக்கை பறித்துக் கொண்டு தப்பியோடினராம். இதுகுறித்து சிறுவனும், பாலமுருகனும் அளித்த புகாா்களின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, கோவில்பட்டி சாலைப்புதூா் பெருமாள்சாமி மகன் கண்ணன் (25), சாஸ்திரி நகா் சண்முகராஜ் மகன் சரவணகுமாா் (24), அன்னை தெரசா நகா் ரத்தினவேலு மகன் ரஞ்சித்குமாா் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும், 3 பேரைத் தேடி வருகின்றனர்.