» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு : தொழிலாளர்கள் வேலையிழப்பு!
செவ்வாய் 21, மே 2024 3:46:03 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை மழை காரணமாக உப்புத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படும் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டமாகும். இங்கு சுமார் 40,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறும் ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் டன் சராசரியாக உற்பத்தியாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
கடந்த ஆண்டு பெய்த பலத்த மழை காரணமாக இந்த ஆண்டு உப்பு உற்பத்தி தாமதமாக இரண்டு மாதங்கள் கழித்து மார்ச் மாதம் துவங்கிய நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதன் காரணமாக உப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை மாவட்டம் முழுவதும் வெளுத்து வாங்கியது இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய தொழிலான உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது..
இதன் காரணமாக இந்த தொழிலை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இன்னும் பாத்திகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி உப்பு உற்பத்தி செய்ய இரண்டு வாரங்கள் ஆகும் என உட்பள தொழிலாளர்கள் தெரிவித்தனர். உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தாங்கள் வேலை இழந்து தவிப்பதாக உப்பள தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில் உப்பு உற்பத்தி பாதிப்பின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தரமான உப்பு ஒரு டன் ரூபாய் 5000 வரை உயர்ந்துள்ளது தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் உப்பு ஒரு டன் 3000 வரை உயர்த்துள்ளது ஆனால் விலை உயர்ந்தும் விற்பனை செய்ய உப்பு இல்லாத நிலைமையே உள்ளது.