» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மழை பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் : ஆட்சியர் உத்தரவு!

திங்கள் 20, மே 2024 5:18:19 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் என  கண்டறியப்பட்டுள்ள 36 இடங்களை வட்டாட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,   தலைமையில் இன்று (20.05.2024) நடை பெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: இந்திய வானிலை மையத்திலிருந்து வரப்பெறும் கனமழை குறித்த எச்சரிக்கைகளை உடனுக்குடன் கீழ்நிலை அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உள்ளாட்சித் துறையினர் நீர்நிலைகளை தூர்வாரி மழைநீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால்களை சரி  செய்ய வேண்டும். மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் என  கண்டறியப்பட்டுள்ள 36 இடங்களை வட்டாட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவக் குழுவினரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஜெனரேட்டர்கள், பம்பு செட்டுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவசரகால உபகரணங்களை பாதிப்பிற்கு உள்ளாகும் இடங்களுக்கு எளிதில் கொண்டு செல்ல ஏதுவாக  இடங்களை தேர்வு செய்து அந்த இடங்களில் உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். 

JCB இயந்திரங்களை வைத்துள்ளவர்களின் தொலைபேசி எண்களைத் தயாராகப் பெற்று வைத்திருக்க வேண்டும். பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார கோட்டத்தினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் அனைத்து நீர்நிலைகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆறு, கால்வாய் முதலிய நீரோட்டங்களின் கரைகள் பலமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மணல் மூடைகளை போதிய அளவில் இருப்பில் வைக்க வேண்டும். மணல் மூடைகளை பாதிப்பிற்கு உள்ளாகும் இடங்களுக்கு எளிதில் கொண்டு செல்ல ஏதுவாக  இடங்களை தேர்வு செய்து அந்த இடங்களில் மணல் மூடைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

கால்வாய்களில் நீர் வரும் வழி மற்றும் வெளியேறும் வழி ஆகியவற்றில் அடைப்புகள் இல்லாதவாறு தூர்வார வேண்டும். கால்வாய்களில் இரு கரைகளிலும் நூறு மீட்டர் தொலைவிற்கு தூர்வார வேண்டும். மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 97 புகலிட மையங்களில் குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளதா என்று வட்டாட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். கோட்ட அலுவலர்கள், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆகியோர் தங்களின் சார்நிலை அலுவலர்களுக்கான கூட்டம் நடத்தி ஆய்வு செய்ய வேண்டும். வெகுகாலமாக பயன்படுத்தாமல் உள்ள பாழடைந்த கட்டிடங்களில் இடி, மின்னல் காலங்களில் பொதுமக்கள் தஞ்சம் அடைவதை தடுத்திடும் பொருட்டு பொதுமக்களுக்கு வட்டாட்சியர்கள் அறிவுரைகள் வழங்க வேண்டும். 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் நிறுவப்பட்டுள்ள தெருவிளக்குக் கம்பங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள கம்பங்களை உடன் மாற்றி அனைத்தும் நல்ல நிலையில் உள்ளது என்பதை உறுதி செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். மரங்களின் கிளைகள் மின்வயரில் படாதவண்ணம் வெட்டி விடப்படவேண்டும். தாழ்வான நிலையில் உள்ள மின்வயர்களை உடனடியாக சரி செய்திட வேண்டும். 

அரசு கட்டிடங்கள் மற்றும் பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கட்டிடங்களை உடனடியாக இடித்திட வேண்டும். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இடி, மின்னலின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை தொடர்பான துண்டுப் பிரசுரம் மற்றும் குறும்பட வீடியோவினை சமூக வலை தளங்களில் பரப்பிட வேண்டும். சுகாதாரத் துறையினர் தேவையான மருந்துகள் இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பாம்பு பிடி வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,   தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.இரா.ஐஸ்வர்யா,  மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எடிசன் , உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன்  மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory