» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை பதிவு மையம் : ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 17, மே 2024 5:08:19 PM (IST)
தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் மையத்தை மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி அருகில் உள்ள ஏ.பி.சி வீரபாகு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று (17.05.2024), 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி பயில விருப்பமுள்ளவர்கள் இணையத்தளம் வழியாக விண்ணப்பம் செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 2023-24ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு/அரசு நிதி உதவி பெறும்/சுயநிதி/மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவியர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி பயில விருப்பம் உள்ளவர்கள் இணையத்தளம் வழியாக விண்ணப்பம் செய்ய கீழ்கண்ட கல்வி நிறுவனத்திற்கு தகுந்த ஆவணங்களுடன் சென்று 06-06-2024 வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆகையால் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க விருப்பம் உள்ள மாணவ-மாணவியர்கள் தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரி ஏற்பாடு செய்துள்ள விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் சேவை மையத்திலுள்ள வசதியைப் பயன்படுத்தி இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த சேவையைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கும்போது அங்குள்ள அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்களின் ஆலோசனைகளையும் பெற்று மாணவர்கள் பயனடையலாம்.
பொறியியல் கல்லூரி விண்ணப்பம் செய்ய இணையதள முகவரி: www.tneaonline.org
மேலும் மாணவ-மாணவியர் கல்வி சார்ந்த ஆலோசனைகள், உயர்கல்வி சார்ந்த விவரங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், கல்விக்கடன் மற்றும் கல்வி உதவித்தொகை போன்ற விவரங்கள் அறிந்து கொள்ள 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை (Toll-free Number) தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.