» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து காவல் துறையினருக்கு பயிற்சி
திங்கள் 13, மே 2024 10:01:27 PM (IST)
பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட 3 புதிய முக்கிய குற்றவியல் சட்டங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு 5 நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
தற்போதுள்ள குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனை சட்டம் (IPC), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (CRPC) மற்றும் இந்திய சாட்சிய சட்டங்கள் (IEA) ஆகியவற்றை ரத்து செய்வதற்கு பாராளுமன்றத்தால் 'பாரதிய நியாய சன்ஹிதா" (Bharatiya Nyaya Sankhita - BNS), 2023 'பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா" (Bharatiya Nagarik Suraksha Sanhita - BNSS) 2023 மற்றும் 'பாரதிய சாக்ஷிய அதினியம்" (Bharatya Sakshya Adhiniyam - BSA) 2023 ஆகியவை 25.12.2023 அன்று இயற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டங்கள் 01.07.2024 முதல் அமலுக்கு வருவதையடுத்து இச்சட்டங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினருக்கு இன்று (13.05.2024) முதல் பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிற்சியானது முதற்கட்டமாக இன்று முதல் 17.05.2024 வரை ஒரு பிரிவாக மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் ஊரகம், மணியாச்சி, கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய 4 உட்கோட்ட காவல்துறையினருக்கும், மற்றொரு பிரிவாக தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தூத்துக்குடி நகர உட்கோட்டம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய 4 உட்கோட்ட காவல்துறையினருக்கும் பயிற்சியளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியை மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட குற்ற பிரிவு - II சந்திரதாசன் உட்பட காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விரிவாக எடுத்துரைத்து பயிற்சி அளித்து வருகின்றனர். இப்பயிற்சி காவல்துறையினர் அனைவருக்கும் ஒவ்வொரு பிரிவுகளாக பயிற்சியளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் அனைத்து உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
Tony fernandoமே 14, 2024 - 12:10:47 AM | Posted IP 162.1*****