» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி 15 பவுன் நகை கொள்ளை: போலீஸ் விசாரணை

திங்கள் 6, மே 2024 3:05:09 PM (IST)

திருச்செந்தூர் அருகே வீடு புகுந்து அரிவாளை காட்டி பெண்களை மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்த யோவான்ராஜ் (33). இவருக்கு திருமணம் ஆகி சுதாசெல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். யோவான்ராஜ் திருச்செந்தூரில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வருகிறார். மேலும் வீட்டின் முன்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். யோவான்ராஜ் நேற்று இரவு விடுதிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே நேற்று தூத்துக்குடியில் இருந்து சுதாசெல்வியின் உறவினர் பெண்கள் வந்திருந்தனர்.

இந்நிலையில் யோவான் ராஜ் வீட்டில் பெண்கள், குழந்தைகள் மட்டும் இருப்பதை தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் இன்று அதிகாலை சுமார் 2.30 மணிக்கு வீட்டின் கதவை உடைத்து முகமூடி அணிந்து வாள், அரிவாள், கம்பி ஆகிய பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த சுதா செல்வி மற்றும் அவரது உறவினர் பெண்கள் ஆகியோரின் கழுத்தில் அரிவாள், வாள் வைத்து மிரட்டினர்.

தொடர்ந்து அவர்கள் அணிந்திருந்த நகைள் மற்றும் வீட்டில் பீரோவில் இருந்த நகைகள் என 15 பவுன் தங்க நகைகள், ரொக்கப்பணம் ரூ.60 ஆயிரம் ஆகியவற்றையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் வீட்டில் இருந்த 3 செல்போன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். செல்போன்களை எடுத்துச் சென்றதால் யாருக்கும் தகவல் தெரிவிக்க முடியாமல் தவித்து வந்த பெண்கள் திருச்செந்தூர், தூத்துக்குடி சாலையில் வாகனத்தில் சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரமாக சாலையில் நின்று உதவி கேட்டபோது சாலையில் வாகனத்தில் சென்ற யாரும் உதவ முன் வராததால், சுதா செல்வி வீட்டில் இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு திருச்செந்தூரில் விடுதியில் பணிபுரியும் கணவரிடம் நேரில் சென்று நடந்ததை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் தெரிந்து வந்த திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்த்ராஜ், தாலுகா இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory