» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது - ஆட்சியர், எஸ்.பி., ஆய்வு
வெள்ளி 19, ஏப்ரல் 2024 8:55:26 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 58 ஆயிரத்து 430 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக தொகுதி முழுவதும் மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்லும்போது செல்போன் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டது. தொகுதி முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு பணிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட 1624 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதியான குடிதண்ணீர் வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்வுதளவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வாக்குசாவடி மையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று தேர்தல் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள், துணை இராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர் காவல் படையினர், முன்னாள் இராணுவத்தினர், தீயணைப்பு படையினர், ஓய்வு பெற்ற காவல்துறையினர் உட்பட 3500 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.