» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்: கோவில்பட்டியில் கோலாகலம்!
சனி 13, ஏப்ரல் 2024 11:45:00 AM (IST)
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாத சுவாமி கோவில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் தினமும் காலை, மாலை சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்கள் மற்றும் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். 9-ஆம் நாளான இன்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
முன்னதாக அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்ற பின்னர் காலை 7.30 மணிக்கு சுவாமி- அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். காலை 8.50 மணிக்கு வான வேடிக்கை, மேள தாளங்கள் முழங்க முதலில் சுவாமி தேரும், அதைத் தொடர்ந்து அம்பாள் தேரும் புறப்பட்டது. மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் சுவாமி- அம்பாள் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மற்றும் கோவில் பணியாளர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 10-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீர்த்தவாரியும், 15-ந் தேதி நாளை (திங்கட்கிழமை) இரவு தெப்ப திருவிழாவும் நடைபெறுகிறது.