» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.1-க்கு ஜனதா சாப்பாடு : மொரார்ஜி தேசாய் பிறந்த நாளில் ஏற்பாடு!

வியாழன் 29, பிப்ரவரி 2024 5:23:54 PM (IST)தூத்துக்குடியில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்த நாளை முன்னிட்டு ஜனதா பரிவார் சார்பில் ரூ. 1-க்கு ஜனதா சாப்பாடு வழங்கப்பட்டது. 

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் இந்திய வரலாற்றில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியவர். பிரதமராக இருந்த போது, பூரண மதுவிலக்கை கொண்டு வந்தவர். நேர்மைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர். 99 வயது வரையுள்ள தனது வாழ்நாளில், தனது பிறந்த தினத்தை வெறும் 25 முறைதான் மொரார்ஜி தேசாய் கொண்டாடியுள்ளார். ஏனென்றால் அவர் பிறந்த பிப்ரவரி 29-ம் தேதி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் வருவதுண்டு.

தேசாய் பிரதமராக இருக்கும் போது, 'ஜனதா சாப்பாடு திட்டம்' என்ற சாப்பாட்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. நாட்டில் உள்ள உணவகங்களிலும் ஒரு ரூபாய்க்கு நல்ல சாப்பாடு கொடுக்க வேண்டும். இதுதான் ஜனதா சாப்பாடு. இத்திட்டத்தை ஏற்று கொண்டவர்களுக்கு மட்டுமே ஓட்டல் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.இதனை நினைவு கூறும் வகையில், அவரது 128 ஆவது பிறந்த தினமான இன்று (வியாழன்) தூத்துக்குடியில் ஜனதா பரிவார் சார்பில் 1 ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க சட்ட ஆலோசகரும், மூத்த வழக்கறிஞருமான எம்.சொக்கலிங்கம், சாப்பிட வந்தவர்களிடம் ஒரு ரூபாய் வீதம் பெற்று, டோக்கன்களை வழங்கி, ஜனதா சாப்பாட்டை தொடங்கி வைத்தார். இந்த டோக்கன் மூலமாக 250 பேர் சாப்பிட்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கு வி.நாகராஜன் தலைமை தாங்கினார். எஸ்.சொக்கலிங்கம், எம்.மணிமொழியார் வரவேற்புரை ஆற்றினார். ஏ.கே.பாபு, எம்.கோமதிநாயகம், என்.வி. ராஜேந்திரபூபதி, டி.ராமச்சந்திரன், என்.சாந்தி நேரு, ஆர்.செல்வராஜ், சாஸ்தாவு, தாமோதரன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital

Thoothukudi Business Directory