» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வருவாய்த்துறை ஊழியர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்
வியாழன் 22, பிப்ரவரி 2024 12:17:33 PM (IST)
தூத்துக்குடியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருந்த ஆணையினை வெளியிட வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 250க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், மாவட்ட தலைவர் சுவாமி நாதன் தலைமையில் ஊழியர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
தூத்துக்குடி தாலூகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணைத் தாசில்தார் ரம்யாதேவி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இன்று 22ம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. 27ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் போராட்டம் காரணமாக வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.