» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஸ்னோலினின் தாயார் வழக்கு - தமிழ்நாடு அரசு விளக்கம்!

புதன் 21, பிப்ரவரி 2024 8:49:57 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய கோரிய வழக்கு விசாரணையை  ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி போராட்டம் நடத்தியவர்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அப்போது அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த தொடர்பாக விசாரிப்பதற்காக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. 

அந்த ஆணையமும் நிறைய பேரிடம் விசாரணை நடத்தியது. இந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பவம் தொடர்பாக 4 ஆண்டுகள் விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை கடந்த 2022ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த விசாரணை அறிக்கையில், போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கொடூரமான செயல். தப்பியோடிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

போராட்டக்காரர்களை கலைக்க வேண்டும் என்ற நோக்கமின்றி, மறைவிடங்களிலிருந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். பூங்காவுக்குள் மறைந்திருந்த போலீசார் போராட்டக்காரர்களை சுட்டு வீழ்த்தினர். எங்கிருந்து துப்பாக்கி குண்டு வருகிறது என்பதை அறியாத மக்கள் தலைதெறிக்க அங்குமிங்குமாக ஓடியதாக அந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு 17 காவல் துறையினரும், மாவட்ட ஆட்சியர் உள்பட வருவாய் துறையினர் ஆகியோர்தான் காரணம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து 17 காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்பட வருவாய் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீட்டை அதிகரித்து தர வேண்டும் என அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்திருந்தது. ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும் ஏற்கெனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது என கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 17 வயது சிறுமி ஸ்னோலினின் தாய் வனிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்ததும் அமைதியான முறையில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சட்டமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஐந்து ஆண்டுகள் காத்திருந்த நிலையில், சட்ட விதிகளுக்கு முரணாக அரசு, இயந்திரத்தனமாக செயல்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்டதாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி காவல் துறையினர், வருவாய் துறையினர் மீது கொலை வழக்கு பதியவும், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்"என மனுவில் கோரப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தியதாகவும் அந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுக்கும் வகையில் தமிழக அரசு 2022 அக்டோபரில் பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்; அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, விசாரணையை பிப்ரவரி 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தது. அந்த வகையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது என்று தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. தமிழக அரசின் விளக்கத்தை அடுத்து விசாரணை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


மக்கள் கருத்து

nishaFeb 22, 2024 - 01:18:38 PM | Posted IP 172.7*****

pullaya vaithu kasu ithu enna porattam

NameFeb 22, 2024 - 06:38:21 AM | Posted IP 172.7*****

Govt kudutha amount vendam nu solitangala

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory