» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உளுந்து, பாசிப்பயறு விலை கடும் வீழ்ச்சி : விவசாயிகள் வேதனை

சனி 10, பிப்ரவரி 2024 8:17:43 AM (IST)கழுகுமலை சுற்று வட்டார பகுதிகளில் உளுந்து, பாசிப்பயறு விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான குமாரபுரம், ராமநாதபுரம், துரைச்சாமிபுரம், வெங்கடேஸ்வரபுரம், வேலாயுதபுரம், காலங்கரைபட்டி, சங்கரலிங்கபுரம், வானரமுட்டி உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம் பயிரிட்டனர். பெரும்பாலும் இப்பகுதி விவசாய நிலங்கள் வானம்பார்த்த பூமி என்பதால் ஆண்டுதோறும் பெய்யும் பருவ மழையை நம்பித்தான் விவசாய தொழில் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இந்த ஆண்டு பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில் இருந்தபோது கடந்த மாதம் பெரும் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து பலத்த சேதமடைந்தது. இதை கண்ட விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

தற்போது பயிரிடப்பட்ட உளுந்து பாசிப்பயறு நல்ல மகசூலை தரும் என்ற நிலையில் இருந்தபோது கடந்த மாதம் பெய்த மழைக்கு ஏராளமான செடிகள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. எஞ்சியுள்ள உளுந்து பாசிப்பயறு செடிகள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் இருந்தபோது கடந்த வாரம் இப்பகுதியில் பெய்து வந்த மழை காரணமாக அறுவடை செய்ய முடியாத நிலை இருந்தது. இதனால் செடிகள் தண்ணீரால் பாதிக்கப்பட்டது.

தற்போது கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மழை இல்லாததால் விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு செடிகளை அறுவடை செய்து அவற்றை விற்பனைக்காக மொத்த கமிஷன் கடைக்கு கொண்டு செல்கின்றனர். தற்போது சந்தை கடைகளில் உளுந்து, பாசிப்பயறு குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரம் விலையில் வாங்கப்படுகிறது. இவை விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத விலையாகும். இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "கடந்த வாரம் வரை பெய்த தொடர் மழையால் உளுந்து, பாசிப்பயறு வகைகளின் தரம் சற்று குறைந்து காணப்படுவதால் சந்தைகளில் குறைவான விலையே நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் கடன் வாங்கி பயிர் செய்த விவசாயிகள் மேலும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படுகின்றனர். 

சில பகுதிகளில் தரமான உளுந்து, பாசிப்பயறு வகைகள் சந்தைகளில் குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரம் வரை வாங்கப்படுவதாக சந்தை வியாபாரிகள் கூறுகின்றனர். எனவே அரசு சரியான விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.


மக்கள் கருத்து

கர்ணன்Feb 12, 2024 - 07:46:32 AM | Posted IP 172.7*****

விலை வீழ்ச்சிக்கு காரணம் இந்த வியாபார புரோக்கர்கள் தான்.எனவே அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory