» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் புகுந்த மிளா: மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது!

ஞாயிறு 10, டிசம்பர் 2023 10:43:37 AM (IST)

திருச்செந்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் புகுந்த மிளா மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் டி.பி.ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் அலுவலக வளாகத்துக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1½ வயது மதிக்கத்தக்க மிளா ஒன்று புகுந்தது. இதனை நேற்று காலை பணிக்கு வந்த பணியாளர்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையில் திருச்செந்தூர் கோட்ட வனச்சரக அலுவலர் கனிமொழி, நெல்லை மண்டல வன கால்நடை மருத்துவ அலுவலர் மனோகரன், கால்நடை ஆய்வாளர் அர்னால்டு, உதவியாளர் ஜிந்தா, திருச்செந்தூர் கால்நடை டாக்டர் பொன்ராஜ் உள்ளிட்டோர் மீட்பு வாகனத்துடன் அங்கு விரைந்து சென்றனர்.

மிளா தப்பியோடாமல் இருக்க வளாகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பின்னர் துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தப்பட்டு மிளாவை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது மிளா அங்குள்ள மர புதருக்குள் மறைந்து நின்றது. வனத்துறையினர் பின்தொடர்ந்து பதுங்கிச்சென்று அதன்மீது மயக்க ஊசி செலுத்தினர். சிறிது நேரத்தில் மிளா மயங்கியது. 

அதன்பிறகு மிளாவினை பரிசோதித்து அதன் கண்களை துணியால் கட்டியும், வலையில் வைத்து லோடு ஆட்டோ மூலம் வல்லநாடு வனச்சரகத்துக்கு உட்பட்ட மலைப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் கூறியதாவது: உடன்குடி அனல் மின்நிலையத்திற்கு பின்புறமுள்ள உடைங்காட்டு பகுதியில் இருந்து தப்பியோடி திசை தெரியாமல் கடற்கரையோரமாக மிளா இங்கு வந்திருக்கலாம். 

சுமார் 4 அடி உயரம் உள்ள இந்த ஆண் மிளா தாவரவியல் வகையை சேர்ந்தது. மனிதர்கள் கூட்டமாக நெருங்கினால் அச்சம் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் மிகவும் கவனமாக மயக்க ஊசி செலுத்தி பிடித்தோம் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory