» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை நிராகரிப்பு: நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 7, டிசம்பர் 2023 8:09:02 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை மதுரை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது 2018 மே 22, 23-ல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்பி, காவல் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் 2018 மே 28-ல் சிபிஐக்கு புகார் அனுப்பினார்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீஸார், வருவாய்த் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையுடன் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியும், அர்சுனனின் புகார் மீது வழக்கு பதியவும் உத்தரவிட்டனர். 

இருப்பினும் போலீஸார் ஏற்கெனவே பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தியது. இதனால் அர்சுனன் உயர் நீதிமன்ற கிளையில் சிபிஐக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். அதன்பிறகு அர்ச்சுனன் புகாரின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை முடித்து மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் காவல் ஆய்வாளர் மீது திருமலை மீது மட்டும் குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது. 

இதனால் சிபிஐ குற்றப்பத்திரிகையை நிராகரிக்கக் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் அர்ச்சுனன் மனு தாக்கல் செய்தார். அதில், 'துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் கூறியிருந்தார்.

இந்த மனு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.பசும்பொன் சண்முகையா முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நிராகரித்தும், சிபிஐ முறையாக விசாரணை நடத்தி 6 மாதத்திற்குள் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory