» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வத்தோடு இருக்கிறார்கள்: கனிமொழி எம்பி பேச்சு!

வியாழன் 30, நவம்பர் 2023 8:43:06 PM (IST)



தொழில் முனைவோர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமுடன் இருக்கிறார்கள் என்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில், சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் , மீன்வளம் - மீனவர்; நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இன்று (30.11.2023) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் வருகிற ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024-ஐ நடத்தவுள்ளார்கள். முதலீட்டாளர்கள் மாநாடு பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீடு செய்யும் களமாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கிற அத்தனை தொழில்முனைவோர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கியமான நிகழ்ச்சியாக இந்த தொழில் முதலீடுகள் மாநாடு ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் 2030ல் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு அதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

ஒரு நாடாக இருந்தாலும், மாநிலமாக இருந்தாலும் மக்கள் அமைதியாக, ஒருங்கிணைந்து வாழக்கூடியதாக இருந்தால்தான் தொழிற்துறை வளர்ச்சி அடையும். அத்தகைய மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. தமிழ்நாடு அடிப்படை கட்டமைப்பு, கல்வி என அனைத்திலும் சிறந்து விளங்குவதோடு அமைதி பூங்காவாக எல்லோரும் பாதுகாப்பாக, நிம்மதியாக வாழக்கூடிய மாநிலமாக உள்ளது. இந்த காரணத்தினால்தான் உலகில் உள்ள பல்வேறு முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை உற்றுநோக்கி முதலீடு செய்ய ஆர்வத்தோடு இருக்கிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு தமிழ்நாட்டை பாதுகாக்கும் அரசாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால் ஒன்றிய அரசு இன்னும் 30 ஆண்டுகளுக்கு நிர்ணயித்துள்ள உயர்கல்விக்கான இலக்கினை தமிழ்நாடு இப்போதே எட்டியுள்ளது.

 தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாட்டில் தொழில்முனைவோர்கள் தொழில் தொடங்க எந்தெந்த விதத்தில் உதவிகள் செய்ய முடியுமோ அந்த முனைப்போடு செயல்பட்டு வருகிறார். நாட்டின் பொருளாதாரத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் முதுகெலும்பாக உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தமிழ்நாட்டில் 49.45 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. நாட்டிலேயே அதிகளவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் புரியும் பெண் தொழில்முனைவோர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மூலம் அதிகளவில் ஏற்றுமதி நடைபெறுகிறது. தொழில்முனைவோர்கள் தொடர்ந்து தொழில் முறைகளை புதுப்பித்து முதலீடுகளை பெருக்குவதற்கு யோசிக்க வேண்டும்.  தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் தொழில்முனைவோர்களுக்கு எந்தெந்த வகையில் உதவி செய்து தொழிற் கனவுகளை நிறைவேற்ற முடியுமோ அதற்கு உறுதுணையாக இருப்போம். தமிழ்நாடு முதலமைச்சர் தூத்துக்குடியில் பர்னிச்சர் பார்க் அமைக்க கையெழுத்திட்டுள்ளார்கள். அங்கு தற்போது 3 நிறுவனங்கள் இயங்கி வருகிறது. 

அடுத்த ஆண்டில் முழுமையாக அனைத்து நிறுவனங்களும் இயங்கி திறக்கப்படும்போது ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, சுற்றியுள்ள பகுதிகளிலும் பல்வேறு தொழில்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மூலம் அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தொழில் முனைவோர்களோடு தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் அனைவரும் என்றும் உறுதுணையாக இருப்போம் எனதெரிவித்தார். முன்னதாக அவர் 4 பயனாளிகளுக்கு ரூ.22.94 லட்சம் மதிப்பில் ரூ.7.08 மானியத்தில் சரக்கு வாகனம், ஆட்டோக்கள், மின் ஆட்டோ ஆகியவற்றை வழங்கினார். மேலும் 98 பேருக்கு ரூ.15,834 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,  மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வகுமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அ.ஸ்வர்ணலதா, அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் தலைவர் தமிழரசு, தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் விஜய்ஆனந்த், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம், அகில இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் வெயிலா.கி.ராஜா, துடிசியா தலைவர் க.நேருபிரகாஷ், மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்) க.அகிலா, திருநெல்வேலி சிட்கோ கிளை மேலாளர் சத்யராஜ், தூத்துக்குடி சிப்காட் திட்ட அலுவலர் ஜோண் மேரி செல்வராணி, தொழில் முதலீட்டு கழகம் கிளை மேலாளர் கஸ்தூரி, மாவட்ட தொழில் மையம் உதவிப்பொறியாளர் (தொழில்கள்) ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory