» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 300 ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி: அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்!
சனி 25, நவம்பர் 2023 9:56:29 AM (IST)
தூத்துக்குடியில் 300 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்க நாணயம் மற்றும் திருமண நிதியுதவிகளை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் 300 ஏழைப் பெண்களுக்கு ரூ.1,37,76,000/- மதிப்பிலான திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்க நாணயமும் மற்றும் ரூ.1,00,25,000/- திருமண நிதியுதவிகளையும் வழங்கினார்.
விழாவில் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாயத்தில் பெண்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் பெண்களின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஈ.வே.ரா. மணியம்மை நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண திருமண நிதியுதவி திட்டம் ஆகிய நான்கு திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் 2019-2023 ஆண்டு வரை உள்ள பெண்களுக்கான நிதியினை தமிழ்நாடு முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டு முதற்கட்டமாக 300 ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கப்படுகிறது. அடுத்தகட்டமாக இந்த நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் தொடர்ந்து வழங்கப்படும். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25000 மற்றும் 1 பவுன் தங்க நாணயம், கல்லூரி படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50000 மற்றும் 1 பவுன் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள்.
மாணவிகள் உயர்கல்வி பயின்றால் அறிவாற்றல் மிக்க சமுதாயம் உருவாகும். ஏனென்றால் வருங்காலத்தில் தங்களது குழந்தைகளுக்கும் கல்வியைக் கற்றுக்கொடுப்பார்கள் என்ற நோக்கத்தில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள்.
தாய்மார்கள் கரு உருவானதில் இருந்து குழந்தைக்கு 2 வயது வரை மிகவும் முக்கியமான காலகட்டமாகும். அந்த காலகட்டத்தில் குழந்தை அறிவாற்றல் மிக்க ஆரோக்கியமான குழந்தையாக வளர்வது தாயின் கைகளில்தான் இருக்கிறது. எனவே கரு உருவானதில் இருந்து தாய்; நல்ல ஊட்டச்சத்து உணவை உண்பதோடு, பிரசவத்திற்கு பிறகு குழந்தைக்கும் ஊட்டச்சத்துள்ள உணவை கொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் , பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகையினை கடந்த 3 மாதங்களாக வழங்கி வருகிறார்கள். இத்திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்களும் மேல்முறையீடு செய்தால் அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும். பெண்களுக்கு 18 வயது முடிந்த பின்புதான் திருமணம் செய்ய வேண்டும். இங்கு வந்துள்ள அத்தனை தாய்மார்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) (பொ) / திட்ட இயக்குநர் (த.ஊ.வா.இ) வீரபுத்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் (மு.கூ.பொ.) காயத்ரி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.