» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிராம சபை கூட்டத்தில் 80 தெருக்களின் சாதிய பெயர்களை நீக்கி சமுதாய புரட்சி: ஆட்சியர் தகவல்!

திங்கள் 2, அக்டோபர் 2023 8:28:34 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில்  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 33 கிராம ஊராட்சிகளில் 80 தெருக்களின் சாதிய பெயர்களை நீக்கி பொதுவான பெயர்களை வைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "தமிழ்நாடு முதலமைச்சர் , சாதி, மத மற்றும் சமூக பாகுபாடின்றி அரசின் திட்டங்கள், சலுகைகள் அனைவரையும் சென்றடையும் வகையில் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று பல நிகழ்ச்சிகளில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் அதன் தெருக்களின் பெயர்கள் சாதிய அடையாளங்களுடன் இருப்பதை தொடர்ந்து மேற்படி சாதிய அடையாளங்களை நீக்கி சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ்ப்புலவர்கள், கவிஞர்கள், தமிழ் இலக்கிய ஆளுமைகள், விஞ்ஞானிகள், மிகச்சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தமிழின் தொன்மையையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் பெயர்கள் அமைக்குமாறு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் கடந்த ஆகஸ்ட் மாதம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி திருச்செந்தூர் வட்டம் மேல ஆத்தூர் கிராம பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சாதி பெயரில் அமைந்த தெருக்களின் பெயர்களை மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தொடர் வேண்டுகோளை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (02.10.2023) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 33 கிராம ஊராட்சிகளில் 80 தெருக்களின் சாதிய பெயர்களை நீக்கி பொதுவான பெயர்களை வைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று தெருக்களின் சாதிய பெயர்களை நீக்கி சமுதாய புரட்சி ஏற்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ்,  வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

இதனை மிகப்பெரிய சமுதாய மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளியாக கருதி ஒவ்வொரு ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இனிவரும் காலங்களில் அனைத்து சாதிய பெயர்களையும் நீக்க முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். இந்த மாற்றத்தை நோக்கி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ்,  தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory