» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்!
புதன் 13, செப்டம்பர் 2023 9:58:55 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.
முதலில் விநாயகர் தேர் வெளிவீதி நான்கிலும் பவனி வந்து நிலையை சேர்ந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது திரளான பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ போன்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு வடம் பிடித்து இழுத்தனர்.
நான்கு ரத வீதிகளிலும் திரண்டு இருந்த பக்தர்களின் நடுவில் அசைந்தாடிச் சென்ற தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் காலை 8 மணிக்கு மீண்டும் நிலையை வந்தடைந்தது. தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.