» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அமலி நகரில் ரூ.58 கோடியில் தூண்டில் வளைவு நிச்சயம் அமைக்கப்படும்: ஆட்சியர் உறுதி

திங்கள் 14, ஆகஸ்ட் 2023 11:50:31 AM (IST)

அமலிநகர் பகுதியில் ரூ.58 கோடியில் தூண்டில் வளைவு அமைப்பதற்கும் தமிழக அரசு முனைப்புடன் இருக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார். 


இதுதொடர்பாக  செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது மாடியில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கும்போது முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் வருவது சிரமமாக இருக்கிறது என்று நீங்கள் சுட்டிக்காட்டினீர்கள். அதனடிப்படையில் ஊரக வளர்ச்சித்துறை நிதி ரூ.50 இலட்சம் மற்றும் கனிமவளத்துறை ரூ.25 இலட்சம் செலவில் என மொத்தமாக ரூ.75 இலட்சம் செலவில் கீழே இருக்கக்கூடிய கட்டுபாட்டு அறையை விரிவுபடுத்தி குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். சென்ற வாரம் இந்த பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. 

அடுத்த 3 மாதங்களில் அந்த பணிகள் முடிவுபெற்று தரைத்தளத்திலே மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மேலே ஏறி சிரமப்படணும் என்று அவசியம் கிடையாது. அதேபோல் லிப்ட் இயங்காமல் இருந்தது. உடனடியாக 2 லிப்டையும் சரிசெய்து தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் 3வது மாடிக்கு வருவதற்கு பயனாக உள்ளது.  அதேபோல் இன்றைக்கு சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்க இருக்கிறோம். இன்றைக்கு உங்களை அழைத்ததன் நோக்கம் அனைவருக்கும் தெரியும். 

நமது மாவட்டத்தில் திருச்செந்தூர் பகுதியில் இருக்கின்ற அமலிநகர் மீனவ கிராமத்தில் 8 நாட்களாக தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் மீனவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.  போராட்டம் செய்தவுடன் நான் அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்தேன். அவர்களிடம் பேசி அவர்களது குறைகளை நிவர்த்தி செய்து தருவோம் என்றேன். ஆனால்  இங்கு வர மறுத்துவிட்டனர். இதேபோலகடந்த முறை பிப்ரவரி மாதம் 10 நாட்களுக்கு மேலாக  அமைதி வழியில் போராட்டம் நடத்தினார்கள். உடனடியாக அங்கு சென்று அங்குள்ள படகுகளை பார்வையிட்டு அவர்களிடம் பேசிவிட்டு அவர்களுக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டுதான் வந்துவிட்டேன். 

கடந்த 2022 ஏப்ரல் மாதம்  மீன்வளத்துறை அமைச்சர்  சட்டசபையில் ரூ.58 கோடி செலவில் அங்கே தூண்டில் வளைவு அமைத்து தரப்படும் என்று அறிவிக்கையை கொடுத்தார்கள். கடந்த 2022 ஏப்ரல் மாதமே பசுமை தீர்ப்பாயம் ஒரு ஆணை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில்தான் இங்கே கல் போடுவது, துறைமுக விரிவாக்கம் போன்ற பணிகள் செய்ய முடியும். அதை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்வளத்துறை சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விதிகள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருக்கும் 11 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பகுதிகளுக்கும் பொருந்தும். 2022க்கு பிறகு நாம் புதிதாக எந்த பணியையும் செய்யவில்லை. 

2022க்கு முன்பு ஆரம்பித்த பணிகளைத்தான் எந்த தடையும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். மணப்பாடு பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருகிறது. பசுமை தீர்ப்பாயம் விதிகளை அமல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு முனைப்புடன் இருக்கிறது. இதனை அமல்படுத்தி அமலிநகர் பகுதியில் ரூ.58 கோடியில் தூண்டில் வளைவு அமைப்பதற்கும் தமிழக அரசு முனைப்புடன் இருக்கிறது. நிறைய பேர் இது வராது என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க பொய். ஏனெனில்  அமைச்சர்  சட்டசபையில் அறிவித்துள்ளார்கள்.  

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் இதுதொடர்பாக ஆய்வு கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். அதேபோல மீன்வளத்துறை செயலாளர் அவர்களின் கோப்புகளும் நிதித்துறையில் இருக்கிறது. மாவட்ட நிர்வாகமும் தூண்டில் வளைவு அமைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. ஏற்கனவே அறிவித்தபடி அது வந்துவிடும். ஆமலிநகர் மக்களை தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்கிறேன்.  என்னிடம் பேசினால் அனைத்து உத்தரவாதங்களையும் தர தயாராக இருக்கிறேன். பசுமை தீர்ப்பாய வழக்கு முடிந்தவுடன் அமலிநகரில்தான் முதல் தூண்டில் வளைவு கொண்டு வரவுள்ளோம்.  தமிழ்நாடு முதலமைச்சர்  வருகிற 18ம் தேதி இராமநாதபுரத்தில் நடத்தும் மீனவர் மாநாட்டிற்கு வருகை தர இருக்கிறார்கள். 

இதுதொடர்பாக தலைமை செயலர்  காணொலி மூலம் மீனவர் திட்டங்களை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள். குறிப்பாக நமது மாவட்டத்தில் நிறைய பேருக்கு பட்டா இல்லாமல் இருந்தது. மீனவ நண்பர்களுக்கு 20 வருடங்களுக்கு முன்பு சிங்கார வேலன் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டது. அந்த வீடுகளுக்கு பட்டா அரசின் பெயரில் இருக்கிறது. இதை மீனவர்கள் பெயரில் பட்டா வழங்க இருக்கிறோம். அதேபோல் சுனாமி குடியிருப்புகளுக்கும் பட்டா இல்லாமல் இருக்கிறது. அதையும்  தமிழ்நாடு முதலமைச்சர்  கையினால் மீனவர்கள் மாநாட்டில் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் 789 மீனவர்களுக்கு வீடுகளுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்திருக்கிறோம். அதேபோல் மீனவ மகளிர் சுய உதவி குழுக்கள் 92 உள்ளது. 

அவர்களுக்கு ரூ.3.2 கோடி அளவில் கடன் வழங்க உள்ளோம். அமலிநகர் மக்களிடமும் நான் பேச தயாராக இருக்கின்றேன்.  தற்போது வரை வரவில்லை. கண்டிப்பாக வருவார்கள் என்று நம்புகிறேன். முதல் நாளில் இருந்தே நான் அவர்களை அழைத்துக்கொண்டிக்கிறேன். அமலிநகருக்கு நான் பல முறை சென்றுள்ளேன். கொரோனா நேரத்தில் தடுப்பூசி போடுவதற்கும், சமூக பொறுப்பு நிதியில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் சென்று அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தேன். அரசு கண்டிப்பாக உங்களுக்கு தூண்டில் வளைவு அமைத்து தரும். எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்.

தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுறுத்தலின்படி நமது மாவட்டத்தில் பள்ளிகளை கண்காணிக்க காவல்துறை, வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை மூலம் கண்காணித்து வருகிறோம். மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து மாற்றத்தை தேடி என்று 1600க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தியிருக்கிறோம். கடந்த வருடம் தலைவன்வடலி கிராமத்தில் ஏற்பட்ட இருதரப்பினர் பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டது. இதுபோல் பள்ளிகளில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ஸ்டெர்லைட் ஆலையில் 1.65 மில்லியன் டன் ஜிப்சம் இருந்தது. அதில் இருந்து 45 ஆயிரம் மெட்ரிக் டன் ஜிப்சம் வெளியே எடுத்துள்ளோம். இன்னும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,   தெரிவித்தார்.பேட்டியின் போது, மக்கள் தொடர்பாளர் நவீன் பாண்டியன் உடன் இருந்தார்.


மக்கள் கருத்து

அந்தோனிAug 14, 2023 - 03:43:04 PM | Posted IP 172.7*****

இவ்ளோ நாளா என்ன செஞ்சீங்க

ராகேஷ் ஜான் குரூஸ்Aug 14, 2023 - 12:54:12 PM | Posted IP 172.7*****

Support amalinagar parathavar

Vasanth SAug 14, 2023 - 12:50:56 PM | Posted IP 172.7*****

எத்தனை மாதம் தாமதப்படுத்தி காரணம் என்ன... பசுமை தீர்ப்பாயம் என்று சொல்கிறீர்கள் ஆனால் கல்லாமொழி பவர் பிளான்டுக்கு பசுமை தீர்ப்பாயம் எவ்வாறு செயல்படுகிறது... எதற்காக ஆட்சியாளர் நேரில் செல்லாமல் அங்குள்ள ஊர் தலைவர்களை எதற்காக அலுவலகத்திற்கு அழைக்கிறார்... பின்பாக முரண்பாடுகளை வெளியில் சொல்லாமல் மறைப்பது ஏன்... தமிழக அரசிடம் போதிய நிதி உதவி இல்லையா.... அப்படி இல்லையே எதற்காக சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறீர்கள்... நான் ஒரு இந்திய குடிமகன் எனக்கு கேட்கும் உரிமை உள்ளது...

கனிட்ராஜ்Aug 14, 2023 - 12:25:19 PM | Posted IP 172.7*****

இதுவரைக்கும் 8மாதம் ஆகியும்தூண்டில்பாலம் தொடர்பாக எத்தனைமனுக்களை அளித்துள்ளீர்கள் அறிவிப்பு வெளியிடமுடியுமா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory