» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பனிமய மாதா 441ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
புதன் 26, ஜூலை 2023 9:32:59 AM (IST)
தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய தங்கத் தேர் திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடியில் உள்ள திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் பனிமயமாதா பேராலயம் ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. உலக புகழ்பெற்ற இந்த பேராலயத்தின் 441ம் ஆண்டு திருவிழா மற்றும் 16-வது தங்கத் தேர் திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை 5 மணிக்கு முதல் திருப்பலியுடன் கொடியேற்ற விழா தொடங்கியது. காலை 7 மணிக்கு கொடியேற்ற சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் 8.30 மணியளவில் பேராலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன்று மதியம் 12 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்கத்தேர் பவனி வருகிற ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி நடக்கிறது. விழாவையொட்டி அதிகாலை 5.15 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலியும், காலை 7 மணிக்கு தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. தங்க தேர் திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினாய்க் பிலிப் நேரி நடத்துகிறார். அதுபோல் தங்கத்தேர் பவனியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஜெபம் செய்து தொடங்கி வைக்கிறார்.
இதனை தொடர்ந்து முக்கிய வீதிகளில் அன்னையின் தங்கத் தேர் பவனி நடக்கிறது. மதியம் 12.30 மணிக்கு தங்கத் தேர் நன்றி திருப்பலியும், மாலை 4 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியன நடக்கிறது. விழாவில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள், பங்குத்தந்தைகள் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்துகின்றனர். மேலும் இந்த விழாவில் வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை சார்பில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டு வருகின்றன.
கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்பி பாலாஜி சரவணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, திமுக மாநில மீணவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டலதலைவர்கள் நிர்மல்ராஜ், வக்கீல் பாலகுருசாமி, அரசு வழக்கறிஞர் ஆனந்தகபரியேல்;ராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள், கலந்து கொண்டனர்.
விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் 6 ஏடிஎஸ்பிகள், 12 டிஎஸ்.பிகள், மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். இதற்கான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலயவளாகம் அருகே தற்காலிகமாக இரு கண்காணிப்பு கோபுரங்கள் போலீசார் அமைத்துள்ளனர். விழா ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை குமார்ராஜா, உதவி பங்குதந்தை சைமன் மற்றும் அருட்சகோதரிகள், இயேசு சபையினர், லசால் அருட் சகோதரர்கள், பேராலய மேய்ப்பு பணிக்குழுவினர், பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்துள்ளனர்.
ஆலய கொடியேற்றத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் நிறைகுடம் பால் மற்றும் வாழைப்பழம் தார், ஆகியவற்றை கொடிமரத்தின் முன் வைத்து வணங்கி கொடியேற்றம் முடிந்ததும் அனைவருக்கும் வழங்கினார்கள். சிறு குழந்தைகளை பெரியவர்கள் கையில் தூக்கி சென்று கொடிமரத்தின் முன்பு உட்காரவைத்து கொண்டு சென்றனர். கொடியேற்றத்தை முன்னிட்டு சமாதனத்தை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட வென்புறாக்கள் பறக்கவிடப்பட்டன. மற்றும் துறைமுகத்திலிருந்து சைரன் ஒலிப்பு ஒலிக்கப்பட்டது.