» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் : தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை!

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 12:24:37 PM (IST)

மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது கிராமங்கள் தான் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பாரத பிரதமர் தமிழகம் முதலமைச்சர் ஆகியோர் கூறி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் பல்வேறு கிராமங்கள் அடிப்படை வசதிகள் முழுமை அடையாமல் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றன. 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தமிழகத்தில் மிகப்பெரிய ஊராட்சியாக திகழ்ந்து வருகிறது. ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சிகளில் இதுதான் மிகப்பெரிய ஊராட்சியாக உள்ளது. இங்கு நடுத்தர, ஏழை குடும்பத்தைச் சார்ந்த மக்கள் அதிக அளவில் குடியிருந்து வருகின்றனர். 

இந்த பகுதிக்கு கடந்த 2004ம் ஆண்டு சாயர்புரம், பெருங்குளம் கூட்டு குடிநீர் திட்டத்தின் ஒரு பம்பிங் நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இது அப்போதைய காலக்கட்டத்தில் மாப்பிள்ளையூரணி பகுதிக்கு ஓரளவு தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. அதன்பின் மக்கள் தொகை அதிகம் ஏற்பட்டு சுனாமி குடியிருப்பு கோமஸ்புரம் என புதிய பகுதிகள் உருவாகி உள்ளன. தற்போது தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது.

2004ல் பொருத்தப்பட்ட இரண்டு மின்மோட்டார்கள் தற்போது பலசமயங்களில் செயல்படாத நிலை இருந்து வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடு இன்று வரை செய்து கொடுக்கவில்லை. மங்களகுறிச்சியில் இருந்து மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் தீட்டப்பட்டு புதிய குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து அப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு தாகம் தீர்க்க வேண்டும் என்பது தான் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவருகிறது. 

பொதுமக்களிடம் ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து செய்ய வேண்டிய அடிப்படை பணிகளை செய்து கொடுக்கின்றனர். ஆனால் குடிதண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை தமிழக அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருக்கும் நேரு, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்தி அந்த திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் என்று அப்பகுதியைச் சார்ந்த பல்வேறு சமூக நல ஆர்வலர்கள் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்து வருகின்றனர். 

அந்த ஊராட்சிக்கு உட்பட்ட மாவட்ட எம்பியாக கனிமொழி, எம்எல்ஏவாக சண்முகையா மற்றும் ஒன்றிய குழுத்தலைவர் மாவட்ட கவுன்சிலர் அந்த ஊராட்சியின் 14 உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் 5 பேர் என ஒட்டுமொத்தமாக அனைவருமே திமுகவைச் சார்ந்தவர்களாகவேதான் இருக்கின்றனர். இதுபோன்ற அமைப்பு வேறு எந்த ஊராட்சிக்கும் கிடைக்காது. இத்தனை பொறுப்புகளில் திமுகவினர் இருந்தும் ஒரு திமுக ஊராட்சி மன்றத்திற்கு செய்ய வேண்டிய முக்கிய பணியான குடிதண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு முன்வராத காரணம் என்ன? என்று சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சியில் உள்ள சில ஒன்றிய செயலாளர்களும் கேட்கின்றனர். 

இந்த குடிநீர் பிரச்சனை 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எதிரொளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மாப்பிள்ளையூரணி ஊராட்சி குடிதண்ணீர் பிரச்சனைக்கு தனிக்கவனம் செலுத்தி தீர்வு காணவேண்டும் என்பதே அப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory