» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் உடல் மீட்பு!

திங்கள் 20, மே 2024 12:53:54 PM (IST)



ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இப்ராஹிம் ரய்சியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. விபத்து நடந்த அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே அதிபர் இப்ராஹிம் ரய்சியின் மரணத்தை அந்நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானில் உள்ள புனித தலமான இமாம் ரேஸாவில் வைத்து மரணச் செய்தி அறிவிக்கப்பட்டது. ஈரான்-அஜா்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜா்பைஜான் அதிபா் இல்ஹாம் அலியெவுடன் ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி பங்கேற்றாா்.

இஸ்ரேலுடன் ஈரான் பகைமை கொண்டுள்ள நிலையில் இஸ்ரேலுடனான அஜா்பைஜானின் ராஜீய உறவு, ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள அஜா்பைஜான் தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் ஆகிய காரணங்களால் ஈரான்-அஜா்பைஜான் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனினும், அணை திறப்பு நிகழ்ச்சியில் இல்ஹாமும் ரய்சியும் ஒன்றாகப் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஈரானின் கிழக்கு அஜா்பைஜான் மாகாணம் வழியாக ஹெலிகாப்டரில் அதிபா் ரய்சி நாடு திரும்பினாா். அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹுசைன் அமீா் அப்துல்லாஹியன் உள்பட பலா் பயணித்தனா். அப்போது ஜோல்ஃபா என்ற இடத்தின் அருகில் உள்ள வனப் பகுதியில், ரய்சி பயணம் செய்த ஹெலிகாப்டா் வழக்கத்துக்கு மாறாக மிகுந்த சிரமத்துடன் தரையிறங்கியதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் முதலில் தெரிவிக்கப்பட்டது.

பின்னா், அந்த ஹெலிகாப்டா் உசி என்ற சிற்றூருக்கு அருகில் தரையிறங்கியதாக அந்தத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஹெலிகாப்டா் தரையிறங்கிய இடம் குறித்த விவரங்களில் முரண்பாடு நிலவுகிறது.மீட்புப் படையினரின் ஹெலிகாப்டரைத் தரையிறக்கி, பாதிக்கப்பட்டவா்களை மீட்கும் முயற்சியும் தோல்வியடைந்தது. இதனால், அதிபா் ரய்சியின் நிலை குறித்து தகவல் எதுவும் தெரியாமல் இருந்தது. 

இந்த நிலையில் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக அதிபர் சென்ற ஹெலிகாப்டர் அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் மலை முகடுகளில் மோதி நொறுங்கி தீப்பிடித்தது. விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. தொடர் மழை காரணமாக விபத்து நடந்த இடத்தை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. 15 மணி நேரம் கழித்தே விபத்து நடந்த இடத்தை மீட்புப்பட நெருங்கியது. 

வனம் மற்றும் மலைப் பகுதியில் கடும் போராட்டத்திற்கு பின் ஹெலிகாப்டரின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. பாதுகாப்புக்கு சென்ற 2 ஹெலிகாப்டர் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றபோதிலும் ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அதிபர் இப்ராஹிம் ரய்சியுடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவு அமைச்சர் உட்பட 8 பேரும் விபத்தில் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory