» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதால் 11 ஆயிரம் பேர் வெளியேற்றம்!
வெள்ளி 19, ஏப்ரல் 2024 8:30:50 PM (IST)
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறியதால் 11 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் விமான நிலையமும் மூடப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
தீவு நாடான இந்தோனேசியா பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளைய பகுதியை சுற்றி அமைந்துள்ளது. எனவே அங்கு 120-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் காணப்படுகின்றன. இவை அவ்வப்போது வெடித்து சிதறி பேரழிவை உண்டாக்குகின்றன. இந்தநிலையில் அங்கு 5 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று சுலவேசி மாகாணத்தில் உள்ள ருவாங் எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
சுமார் 2 ஆயிரம் அடி உயரம் உள்ள இந்த எரிமலை ஒரே நாளில் 5-க்கும் மேற்பட்ட முறை வெடித்து சிதறியது. அப்போது அந்த எரிமலை விண்ணை முட்டும் அளவுக்கு தீக்குழம்புகளை கக்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. எனவே விமானங்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மனாடோ சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் அங்கு செல்ல வேண்டிய விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
இதற்கிடையே அந்த எரிமலை வெடித்து சிதறியதால் வெளியேறிய சாம்பல் சுமார் 1,500 அடி தூரத்துக்கு பரவியது. எனவே அந்த எரிமலையை சுற்றி 6 கிலோ மீட்டர் வரை பொதுமக்கள் செல்லக்கூடாது என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் சுமார் 11 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த கவனமாக இருக்கும்படி அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.