» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நவாஸ் கட்சியின் அதிகாரப் பகிர்வு திட்டத்தை நிராகரித்த பிலாவல் பூட்டோ!

திங்கள் 19, பிப்ரவரி 2024 3:59:10 PM (IST)

பாகிஸ்தானில் பிரதமர் பதவி தொடர்பாக நவாஸ் கட்சியின் அதிகாரப் பகிர்வு திட்டத்தை பிலாவல் பூட்டோ நிராகரித்துள்ளார். 

பாகிஸ்தானில் கடந்த 8-ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலில் அதிக அளவில் வெற்றி பெற்றபோதிலும், அவர்கள் ஆட்சியமைக்க முடியாத சூழல் உள்ளது.

இதையடுத்து, ஆட்சியமைப்பதற்காக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்தன. பிரதமர் பதவி, மந்திரிகள் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து இரு கட்சிகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீபும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்தனர்.

இதுவரை பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், பிரதமர் பதவி மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்த திட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இந்நிலையில் பிரதமர் பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பான நவாஸ் கட்சியின் திட்டத்தை பாகிஸ்தான் மக்கள் கட்சி நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக, சிந்து மாகாணத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வெற்றி கூட்டத்தில் பிலாவல் பூட்டோ பேசியதாவது: முதல் மூன்று ஆண்டுகளுக்கு பிரதமர் பதவியை அவர்கள் (பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ்) வகிப்பதாகவும், மீதமுள்ள இரண்டு வருடங்கள் நமக்கு கொடுப்பதாகவும் கூறினார்கள். நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். நான் இப்படி பிரதமராக விரும்பவில்லை என்றும் தெரிவித்தேன். 

மக்கள் என்னை தேர்ந்தெடுத்தபிறகுதான் நான் பிரதமர் ஆவேன் என்றும் தெரிவித்தேன். அதேசமயம் கூட்டணி மந்திரிசபையில் மந்திரி பதவியும் கேட்கவில்லை. அரசியல் பதற்றத்தை தணிக்க, அதிபர் தேர்தலில் எனது தந்தை சர்தாரியை எங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளோம். அவர் பதவி ஏற்கும்போது, பதற்றத்தை தணித்து, மத்திய அரசையும், மாகாணங்களையும் பாதுகாப்பார். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory