» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை அரசு மீது போர்க் குற்ற விசாரணை: விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

வியாழன் 8, நவம்பர் 2018 10:28:43 AM (IST)

இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை மேற்கொள்வதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டது என்று எமது (தமிழர்கள்) அரசியல்வாதிகள் புலம்பத் தொடங்கியுள்ளனர். 

இதில் எந்தத் தவறும் இல்லை. இதுதான் வரலாறு என்று நன்கு தெரிந்துதான் அவர்களுடன் (சிங்களர்கள்) கரம் கோர்த்தோம். பதவிகளைப் பெற்றோம். பணம் பெற்றோம். அவர்களுடன் சேர்ந்து நல்லாட்சி என்றோம். இன்னும் ஒருபடி மேலே சென்று அவர்களை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசினோம். அரசியலமைப்பு மாற்றம் என்ற ஒரு மாயைக்குள் நமது இனப் பிரச்னைக்கான தீர்வைக் கொண்டு சென்று, தனித்துவத்தையும், அரசியல் அபிலாஷைகளையும் கரைத்துவிட்டோம்.
 
ஆனால், சிங்கள அரசியல்வாதிகளோ எம்மைப் பயன்படுத்தி தமக்கு எதிரான சகல தடைகளையும் உடைத்துவிட்டு, எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாமல் அதிகாரப் போட்டியில் இறங்கியுள்ளனர். இந்த அதிகாரப் போட்டியில் யார் கூடுதலாக தமிழர்களை நசுக்குவார்களோ அவர்களே சிங்கள மக்களின் கூடுதலான வாக்கைக் கவர முடியும் என்ற உத்தியை மைத்ரிபால சிறீசேனா கையில் எடுத்துள்ளார். தான் உயிருடன் இருக்கும்வரை வட கிழக்கு இணைப்புக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். அவரை விமர்சித்து கடுமையாக பேசுவதால் பயன் எதுவும் இல்லை.
 
இனியும் காலம் தாழ்த்தாது தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெனீவா மனித உரிமைகள் சபை கூட்டத்தொடரில் இலங்கை அரசு மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளவதற்கான முன்மொழிவை உறுப்பு நாடுகளையும், ஏனைய நாடுகளையும் அனைவரும் வலியுறுத்த வேண்டும். இந்த நடவடிக்கையின் மூலமே இறுதி யுத்தத்தின் பாதிப்பு குறித்து புரிந்துணர்வையும் சிங்களர்களுக்கு ஏற்படுத்தி உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இல்லாவிட்டால், குற்றம் இழைத்தவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக போலி தேசியவாதத்தைக் கையில் எடுத்து, இன முரண்பாட்டை மேலும் சிக்கல் நிலைக்கு உட்படுத்துதற்கே தற்போதைய அரசியல் நிலை வழிவகுக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Joseph Marketing


crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors
Thoothukudi Business Directory