» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எஸ்ஐஆர் பணிச்சுமையால் 26 அதிகாரிகள் மரணம்: தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் பாய்ச்சல்

வெள்ளி 28, நவம்பர் 2025 4:15:36 PM (IST)

எஸ்ஐஆர் பணிச்சுமையால் 26 பிஎல்ஓ அதிகாரிகளின் மரணத்திற்குத் தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ்  கட்சி வலியுறுத்தியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் மற்றும் அதிகாரிகளின் தொடர் மரணங்களை மறைக்கவே, சமூக வலைதள விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை சரிபார்ப்பதற்காக சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளத் தலைமை தேர்தல் ஆணையம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. 

இந்தப் பணிகளின்போது குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளை நீக்க முயற்சி நடப்பதாக ஏற்கனவே புகார்கள் எழுந்தன. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள கணக்குகள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இயக்கப்படுவதாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் நடைபெறும் முறைகேடுகளை மறைப்பதற்கான முயற்சி என்று காங்கிரஸ் தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

அவசர கதியில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளால் ஏற்பட்ட மனழுத்தம் காரணமாக, கடந்த 20 நாட்களில் மட்டும் 26 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், இது பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ‘படுகொலை’ என்றும் காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது. 

மேற்கு வங்கத்தில் தற்கொலை செய்துகொண்ட அதிகாரி ஒருவர் தனது கடிதத்தில், ‘தேர்தல் ஆணையத்தின் பணிச்சுமையே தனது தற்கொலை முடிவுக்குக் காரணம்’ எனக் குறிப்பிட்டுள்ளதையும் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. சமூக வலைதளப் பக்கங்களின் இருப்பிடம் தவறாகக் காட்டுவது தொழில்நுட்ப கோளாறு என்றும், குஜராத் பாஜகவின் பக்கம் அயர்லாந்து நாட்டிலும், டிடி நியூஸ் பக்கம் அமெரிக்காவிலும் இருப்பதாகக் காட்டுவதை மேற்கோள் காட்டி காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்வதற்காகவே அதிகாரிகளுக்கு ‘மனிதாபிமானமற்ற பணிச்சுமை’ கொடுக்கப்படுவதாக காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது எழுந்துள்ள சமூக வலைதள இருப்பிடம் தொடர்பான விவாதங்கள் அனைத்தும், வாக்காளர் பட்டியலில் நடக்கும் ‘அப்பட்டமான வாக்குத் திருட்டு’ விவகாரத்தை திசைதிருப்புவதற்காகவே பாஜக நடத்தும் நாடகம் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்த விவகாரத்தில் பிஎல்ஓ அதிகாரிகளின் மரணத்திற்குத் தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory