» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி நியமனம்: காங்கிரஸ் கண்டனம்!

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 5:27:17 PM (IST)

இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக 1989-ம் ஆண்டு பேட்ச் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஹரியானாவைச் சேர்ந்த விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். 

தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் ஓய்வைத் தொடர்ந்து தேர்தல் ஆணையராக இருந்த ஞானேஷ் குமார், தலைமைத் தேர்தல் ஆணையராக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரும், தேர்தல் ஆணையர்களாக சுக்பிர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரும் செயல்படுவர்.

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளரான விவேக் ஜோஷி, கடந்த 2019-ம் ஆண்டு முதல் மத்திய பணிகளில் உள்ளார். முன்பு இவர், இந்திய அரசின் பணியாளர்கள் ஆணைய செயலாளராகவும், உள்துறை அமைச்சகத்தின் பதிவுத்துறை ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 1966 ஆண்டு மே 21-ல் பிறந்த விவேக் ஜோஷி (58) வரும் 2031-ம் ஆண்டு வரை தேர்தல் ஆணையத்தில் பணியாற்றுவார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 2029, ஜன. 27-ல் ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்த 2029 மக்களவைத் தேர்தலின் போது ஜோஷி தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரதமர் அலுவலத்தில் நடந்த கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட சில மணி நேரத்துக்கு பின்பு, தலைமைத் தேர்தல் ஆணையராக அவரை நியமனம் செய்யும் உத்தரவு திங்கள்கிழமை வெளியானது.

எனினும், இதற்கு தேர்வு குழுவின் ஒரு உறுப்பினரான மக்களவைத் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தலை ஆணையரை நியமிக்கும் குழு தொடர்பான வழக்கு விசாரணை புதன்கிழமை (பிப்.19) நடைபெற இருப்பதால் இந்த கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தேர்தல் ஆணையருக்கான பெயர்கள் பரிந்துரையின் போது எதிர்க்கட்சி தலைவர் அங்கு இல்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்தல் ஆணையரைத் தேர்வு குழுவுக்கு பிரதமர் தலைமைத் தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கண்டனம்

தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நீதிமன்றத்தை அவமதித்து புதிய ஆணையரை மத்திய அரசு நியமித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான பிரமோத் திவாரி செய்தியாளர்களுடன் பேசியதாவது: "தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றமும் ஒப்புக் கொண்டுள்ளது. இத்தகைய சூழலில் அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? இது நீதிமன்றத்தையும் அரசியலமைப்பின் அடிப்படை உணர்வையும் அவமதிப்பதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory